அருள்நெறி
 

திருச்சிற்றம்பலம்

4. அருள்நெறி

கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்? அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.

அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.

அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது? காண்பார் காணுமிடம் காணப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம், கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம் முதலியவாய் விளங்கும்.

இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.

நன்மை தீமை என்பவை யாவை? நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம். புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.

புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன? மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:- மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். வாக்கினால் பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள். இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.

அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்? அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி; யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற் கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.

அறியாத பாவங்கள் யாவெனில், நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினஞ் செய்யுஞ் ஜபத்தாலும், பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.

பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன? மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.

வேதாந்திகள் "பாவம் முதலிய கருமங்களும், புண்ணியம் முதலிய ஏதுக்களும் நமக்கில்லை, நாம் சர்வசாக்ஷி" என்கின்றார்களே -அஃதென்ன? தேகவாசனை, இந்திரியவாசனை, கரணவாசனை, பிராணவாயுவின் செயற்கையிலுண்டாகும் வேறுபாடு முதலிய நன்மைகளில் சலிப்பற்று ஆகாரம், நித்திரை, பயம் முதலியவைகளில் தாம் சலித்தும் சோர்ந்தும் திடுக்கிட்டும் இல்லாமல், நிவாததீபம் போல் விளங்கும் ஜீவன் முத்தர்கள் சமூகத்தில் பாவ கிருத்தியங்கள் நடவா; புண்ணியங்களும், பிரயோஜனம் பற்றிச் செய்யார்கள்; பொன்னும் ஓடும் சரியாகக் காண்பார்கள். அத் தன்மையுடைய நித்திய முத்த சுத்த ஞான தேக சித்தர்கட்குப் பாவ புண்ணியமில்லையென்று அவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நமக்கே தெரியும்.

மேலும், அவர்கள் இந்தப் பவுதிக சரீரத்தில் வசித்தாலும், சரீரமாகிய தத்துவ தாத்விகங்கள் இப்போது நமக்கு அசுத்த தேகமாயும் அசுத்தப் பொறியாயும் அசுத்தக் கரணமாயும் அசுத்த அனுபவமாயும் அசுத்த அறிவாயும் இருப்பது போல் இரா. தத்தபடத்தைப் போல் காரியத்தில் இலதாயும் காரணத்தி லுளதாயும், அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும்.

திருச்சிற்றம்பலம்

அருள்நெறி முற்றிற்று.


VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013