காப்பு
நேரிசை வெண்பா
அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத்
து‘ய முகத்தான் துணை.கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முள்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான் - அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.
கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், காவிரி என்னுந் தெய்வத்தன்மையுள்ள நதியினால் எந்தக் காலத்திலுங் குறைவுபடாத நீர்வளப்ப முடையதாய் வாழைச் சோலை, பலாச்சோலை, மாஞ்சோலை, தென்னஞ்சோலை, கமுகஞ்சோலை, கருப்பஞ்சோலை முதலாகிய பலனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்க, அசோகு, குருக்கத்தி, சண்பகம், பாதிரி முதலான விருக்ஷங்களால் நெருங்கி, வண்டுகள் பாடுகின்ற மலர்ச்சோலைகளும், தாமரைத் தடாகங்களும், நீர் நிறைந்து அல்லி நீலம் முதலான புட்பங்கள் மலர்கின்ற ஓடைகளுடத, பொய்கைகளும், ஏரிகளும், குளங்களும் பலவிடங்களிலு முள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கி யுள்ளதாய், சிதம்பரம், பஞ்சநதம், மத்தியார்ச்சுனம், சம்புகேச்சுரம் முதலான திவ்வியக்ஷேத்திரங்கடள இடையிடையி லுள்ளதாய், இல்லற தருமத்தில் எள்ளளவும் பிழைபடாது செல்வத்திலும் கல்வியிலும் நிறைவுள்ள குடிகளுக்கிடமானதாய், பல வளப்பங்களுங் கொண்டு பூமிதேவிக்கு முகம்போல விளங்குகின்ற சோழதேசத்தில்; பாதாளலோகத்தைப் பார்த்திருக்கின்ற ஆழமுள்ள அகழியினாற் சூழப்பட்டு, இந்திரலோகத்தை எட்டிப்பார்க்கின்ற உன்னதமுள்ள கோபுரங்களையுடைய மதிலும், உய்யானம் நந்தவரீளீ பூஞ்சோலை முதலானவைகளும்,தெய்வதீர்த்தம், பிரமதீர்த்தம், வசந்தவோடை, செங்குவளையோடை முதலான நீர்நிலைகளு முள்ளதாய், தேர்நிலைகள், யானைக் கூடங்கள், குதிரைப்பந்திகள், சேனையிடங்கள், ஆஸ்தான மண்டபம், அரசமண்டபம், விசித்திரமண்டபம், விநோதமண்டபம், நியாயமண்டபம், நிருத்தமண்டபம், கல்விமண்டபம், கணக்கறிமண்டபம், பாடல்மண்டபம், பரிசனமண்டபம், சித்திரைமண்டபம், தேவாசிரியமண்டபம், சித்திரத்தெற்றி, சிலம்பக்கூடம், ஆயுதச்சாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் உடையதாய், ரத்ன பீடிகைகளும், கனக மாளிகைகளும், பளிங்கு மாடங்களும், மணிப்பந்தல்களும், மகரதோரணங்களும், மங்கல கோஷங்களுமுள்ள கடைவீதி, கணிகையர்வீதி, சூத்திரர்வீதி, வைசியர்வீதி, அரசர்வீதி, அந்தணர்வீதி, ஆதிசைவர்வீதி, சைவர்வீதி, வைதிகர்வீதி, தபோதனரிருக்கை, சைவமுனிவர்மடம், உட்சமயத்தார் உறையுள் முதலான வளப்பங்களை உடையதாய், தியாகராஜப்பெருமான் எழுந்தருளிய கமலாலயம் என்னும் திருக்கோயிலை உள்ளே உடையதாய், சோழராஜர்கள் பரம்பரையாக அரசாட்சி செய்வதற்கு உரிய ராஜதானியாய், நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம் போல் விளங்கிய திருவாரூர் என்கிற நகரத்தில்; மூன்று சுடர்களிலும் முதற்சுடராகிய மேன்மையடைந்த சூரியகுலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழராஜர்களில் சிறந்தவராய், அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவராய், உயிருக்கு உறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளை யுடையராய், எல்லா உயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய், வேதமோதுதலும், யாகஞ்செய்தலும், இரப்பவர்க்கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரை அழித்தலும் என்னும் ஆறு தொழில்களும், வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள் மந்திரியும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையும் உடையவராய், வழக்கை அறிவிப்பவரையும் தங்களுக்குள்ள குறையைச் சொல்லிக்கொள்பவரையும் இலேசிலே தமது சமுகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறையை முடித்துங் கொடுப்பவராய், பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனியவசனஞ் சொல்லுகின்றவராய், பின்வருவதை முன்னே அறிந்துகொள்வதும் உறவினர், அயலார், சினேகர், பகைவர், இழிந்தோர், உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் காலவேற்றுமையாலும், குணவேற்றுமையாரும் உண்டாகின்ற நன்மை தீமைகளை உள்ளபடி அறிந்து கொள்வதுமாகிய விவேகமுள்ளவராய், அகங்காரம் காமம் கோபம், லோபம் மோகம் பொறாமை வஞ்சகம் டம்பம் வீண் செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் காணாதவராய், துர்க்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல் நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையுஞ் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், பகைவலியும் தன்வலியும் துணைவலியும் காலநிலைமையும், இடநிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத் தக்க உத்தியோகங்களை அவரவர்க்கக் கொடுத்தும், பழமைபாராட்டியும், சுற்றந்தழுவியும், கண்ணோட்டம் வைத்தும், சாதியியற்கை, ஆசிரமவியற்கை, சமயவியற்கை, தேசவியற்கை, காலவியற்கை, முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும் நல்லொழுக்கத்துடன் நடப்பவராய், குடிகளுக்கு அணுவளவு துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங்கொண்டு மனமுருகுவதனால் தாயை யொத்தவராய், அத் துன்பத்தைவிட்டு இன்பத்தை அடையத்தக்க நல்வழியை அறியும்படி செய்விப்பதனால் தந்தையை யொத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவை யொத்தவராய், அந்தக் குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று அது பற்றி முயற்சி செய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்க வழியிலிருந்து தவறினால் அந்தக் குற்றத்துக்குத் தக்க தண்டனை யொத்தவராய், குடிகளுக்கு ஆபத்து நேரிடும்போது கட்டியவஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி காரியமது என்று காட்டுகிறபடியால் கண்போன்றவராய், குடிகளுக்கு அச்சம் அவலம் முதலானவை நேரிடாமல் காத்து வருதலால் உயிர் போன்றவராய், குடிகள் தம்மை நினைக்குந்தோறும் 'இப்படிப்பட்ட நற்குண நற் செய்கைகளையுடைய புண்ணியமூத்த்தையை அரசனாகப் பெற்ற நமக்குடக குறை யொன்றுடத இல்லை' என்று களிக்கின்றபடியால் பொன்புதையலை யொத்தவராய், கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை யொத்தவராய், அறிவே ஆயிரங் கண்களாகவும் கைகளே கற்பகமாகவும் கண்களே காமதேனுவாகவும் திருமுகமே சிந்தாமணியாகவும் மனோதிடமே வச்சிராயுதமாகவுங் கொண்டபடியால் இந்திரனை யொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும் அறம் பொருள் இன்பம் வீடென்னுடத நான்கு பொருளுடம் அடைதற்குரிய நான்கு மார்க்மே நான்கு முகமாகவுங்கொண்டு அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிறபடியால் பிரமனை யொத்தவராய், ஆக்கினாசக்கரமே சக்கராயுதமாகவும் செங்கோலே திருமகளாகயும் சிறந்த பெரும்புகழே திருப்பாற்கடலாகவும் யுக்தமல்லாத காரியங்களை யொழிந்திருப்பதே யோகநித்திரை யாகவுங் கொண்டு மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுது கொடுத்து வருகின்றபடியால் திருமாலை யொத்தவராய், சோர்வில்லாமை து‘ய்மை வாய்மை என்னும் மூன்றுமே மூன்று கண்களாவும் துணிவுடைமையே சூலமாகவுங் கொண்டு பாவங்களை யெல்லாம் நிக்கிரஞ் செய்து வருகின்றபடியால் உருத்திர மூர்த்தியை யொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ள படியால் அமுதத்தை யொத்தவராய், சிவபக்தியில் மிகுந்தவராய், பொறுமையில் பூமியை யொத்தவராய், தருமமே உருவாகக் கொண்டு நடுநிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனச்சோழர் என்னும் பெயரையுடைய சக்கரவர்த்தியானவர், கலிங்கர் குலிங்கர் வங்கர் கொங்கர் அச்சியர் கொச்சியர் தெங்கணர் கொங்கணர் தெலுங்கர் முதலான தேசத்தரசர்க ளெல்லாம் திறைகட்டி வணங்க, உலக முழுவதையும் ஒருகுடை நிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில்: உலகமெங்கும் புலியும்பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருத்துங் கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையுங் காகமும் கூடிப் பறந்தும், பூனையும் எலியும் பொருந்தி யிருந்தும், இந்தப்படி மற்றுமுடளள விரோதமாகிய உயிர்களுடத ஒன்றுக் கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும், மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும் வாடுதல் உலர்தல் உதிர்தல் வெட்டுண்ணல் முதலான குறைகளில்லாமல் வளர்ந்தோங்கி வாழ்ந்திருக்கவும், பெருங்காற்று பெருவெள்ளம் பெருமழை தீப்பற்றல் இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல் சுகுணமான காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறா மல் உண்டாயிருக்கவும், பசிநோய் உடம்புநோய் அவமிருந்து உயிரச்சம் முதலான துக்கங்களொன்றுடத சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும், பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கின்ற ஜாதியாரும், பிரமசாரி கிரகஸ்தன் வானப் பிரஸ்தன் சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர் வைணவர் வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவுபடாமல் வாழ்ந்திருக்கவும், அன்னதானம் சொர்ணதானம் கோதானம் பூதானம் முதலான தானங்களும் தேவாலயங் கட்டுவித்தல் திருக்குளமெடுத்தல் செழுஞ்சோலை வைத்தல் தண்¬ர்ப்பந்தல் வைத்தல் சத்திரங் கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், தியானஞ்செய்தல் ஜெபஞ்செய்தல் முதலான தவங்களும் தவறுபடாமல் ஓங்கியிருக்கவும், தியாகேசப் பெருமானுக்கும் மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் திரிகால பூசைகளும் திருப்பணிகளும் திருவிழா முதலான சிறப்புகளுடத குறைவில்லாமல் நடக்கவும் அவரது ஆக்கினையே செய்வித்து வந்தது.
அவர் ஆளுகைக்குட்பட்ட உலகங்களில், பூவே பறிபடுவது, புனலே சிறைபடுவது, காற்றே அலைபடுவது, கல்லே கடின முடையது, மாவே வடுப்படுவது, வாழையே குலைபடுவது, வண்டே மதுவுண்பது, நெற்கதிரே போர்படுவது, வயலே வளைபடுவது, மாதரிடையே குறைபடுவது, தரித்திரமே தரித்திரப்படுவது, துக்கமே துக்கப்படுவது பொய்யே பொய்படுவது. இவையல்லாமல், பொருள் பறிக்கப்படுவோரும், சிறைச்சாலையில் வைக்கப்படுவோரும், பகைவரால் அலைக்கப்படுவோரும், கடின மனமுள்ளவர்களும், வடுப்படுவோரும், கட்டுண்போரும், குத்துண்போரும், போரிற்படுவோரும், வளைபடுவோரும், குறைபடுவோரும், தரித்திரப்படுவோரும், துக்கப்படுவோரும், பொய்படுவோரும் வேறேயில்லாமல் மேன்மையே விளங்கியிருந்தது.
இந்தப் பிரகாரமாக மந்திரி முதலான உறுதிச் சுற்றங்களுடன் உலகாண்டிருந்த அம் மனுச்சோழரென்னும் சக்கரவர்த்தியானவர் புத்திரப் பேறில்லாமல் மனம் வருந்தி அதுபற்றியும் அறுபது வருஷ காலமாக அனேக தானங்களும் தருமங்களும் யாகங்களும் விரதங்களுஞ் செய்தும் புத்திரோற்பத்தி இல்லாமையால், "புத்திரச் செல்வம் பெறாதவர் பொருட்செல்வம் பெற்றும் பயனில்லையே; புத்திரன்போல் நமக்கு இந்த அரசச் செல்வம் இம்மை மறுமை இன்பங்களைக் கொடாதே; சந்ததியில்லாவிட்டால் பிற்காலத்தில் கண்களில்லாத முகமும் சூரியனில்லாத பகலும்போல, அரசனில்லாது இவ்வுரகந் தலைதடுமாறிப்போமே; ஆதலால் இனிப் புத்திரனைப் பெற்றுக் கொள்வதற்குத் தக்க முயற்சி நமது ஆண்டவனாகிய தியாகராஜப் பெருமானை வழிபடுதே யல்லது வே றொன்றுமில்லை; ஆனால் மோக்ஷப் பேறு குறித்து நிஷ்காமியமாக இத்தனை நாளும் வழிபட்டு வந்த நாம் இப்போது புத்திரப்பேறு குறித்துக் காமியமாக நமதாண்டவனை வழிபடுவது தகுதியல்ல வாயினும், 'தீராக் குறைக்குத் தெய்வமே முடிவு' என்கின்றபடி எவ்விதத்திலும் தீராத புத்திரனில்லாக் குறையைச் சிவ பெருமானது திருவருளாலேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று ஆலோசித்துத் துணிவுகொண்டு, தமது மனைவியாருடன் ஆகமவிதிப்படி கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பயபக்தியுடன் பூங்கோயிலைப் பஞ்சாவரண வலமுஞ் செய்து உட்புகுந்து, தியாகராஜப் பெருமானது சந்நிதிக்கெதிரே அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்து, வணங்கிய முடியும், மலர்ந்த முகமும், நீர் பொழிகின்ற கண்ணும், துதிக்கின்ற நாவும், கூப்புகின்ற கையும், புளகமெழும்புகின்ற உடம்புங் கொண்டு நின்று, 'புத்திரப் பேறில்லாத குறையைத் தீர்த்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துப்பலவிதமாகத் தோத்திரஞ்செய்து தமது அரண்மனைக்குச் சென்று இந்தப் பிரகாரமே நாள்தோறும் போய் வழிபட்டுப் பிரார்த்தித்துக் கொண்டே வந்தார். அவர் செய்யும் வழிபாட்டுக்கும் வந்தனைக்கும் இரங்கித் தியாகராஜப் பெருமான் புத்திரப் பேறுண்டாகும்படி அனுக்கிரகஞ்செய்ய, அந்த அனுக்கிரகத்தால் மகாராஜனுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி வலம்புரிச் சங்கு விலையுயர்ந்த வெண்முத்தினைக் கருப்பங்கொண்டதுபோலத் தேவியார் தமது திருவயிற்றில் கருப்பங்கொண்டு, பத்து மாதமுஞ் சென்று நல்ல சுபதினத்தில், தர்மதேவதை தாண்டவமாடவும் வானகத்தார் மலர் சொரிந்து வாழ்த்தவும் வையகத்தார் மனங் களிக்கவும், அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றதுபோலவும் மல்லிகைக்கொடி மணமுள்ள மலரைப் பூத்ததுபோலவும், எவ்வௌர்களும் அதிசயிக்கத் தக்க சர்வ லட்சங்களும் நிறைந்த வடிவுடளள ஒரு புத்திரனைப் பெற்றார்.
புத்திரன் பிறந்த சந்தோஷமான சமாசாரத்தைப் பாங்கிகள் அதிசீக்கிரமாக வந்து தம்மை மறந்த மனக் களிப்புள்ளவர்களாக எதிர் நின்று "ஆண்டவனே! எங்கள் தலைவியார் திருவயிற்றிலிருந்து தேவரீர் புகழே வடிவாகவும் புண்ணியமே உயிராகவும் கொண்டு பொன்னலகத்தைக் காக்கின்ற புரந்தரனும் நாணமடையப் பூவுலகத்தைக் காக்கத் தக்க வல்லமையுள்ள புத்திர சிகாமணி உதயஞ்செய்தது" என்று விண்ணப்பஞ்செய்யக் கேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர், து‘ரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட வர்த்தகனைப் போலவும், கூடிப் பிரிந்த மங்கையின் குரலோசை கேட்ட நாயகனைப்போலவும், தாகங்கொண்டு தவிக்குங் காலத்தில் சமீபத்தே தண்-ருண்டென்று சொல்லக்கேட்ட தேசசஞ்சாரியைப் போலவும், மனங்குளிர்ந்து உடல் பூரித்து அளவிடப்படாத களிப்புடையவராய், அந்தப் பாங்கிகளுக்கு விலையுயர்ந்த ஆடையாபரணங்களை வெறுப்படையும்படி பரிசு கொடுத்து, தாம் நீராடி நியமங்கள் முடித்து, வேதவித்துக்களாகிய பிராமணர்களுக்கு விதைதானம் சொர்ணதானம் கன்னிகாதானம் அசுவதானம் கஜதானம் பூதானம் கோதானம் முதலான தானங்களைக் கொடுத்து, புத்திரன் பிறந்த நாள்தொட்டுப் பன்னிரண்டு வருஷமட்டுங் குடிகள் வரிகொடாமல் சர்வ மானியமாகத்தாமே அனுபவித்துக்கொள்ளவும், திறை கட்டி வரும் அரசர்கள் ஏழு வருஷமட்டும் அந்தத் திறைகளைக் கட்டாமல் தாங்களே எடுத்துக்கொள்ளவும், சிறைச்சாலையிலிருந்த சத்துருக்களை விட்டுவிடவும், பொக்கிஷசாலையைத் திறந்துவிட்டு நகரிலும் நாட்டிலும் உள்ளோர் யாவரும் தங்கள் தங்களுக்க வேண்டிய மட்டில் ஏழு நாள் வரையில் எடுத்துக் கொண்டு போகவும், தேவாலயங்களிலெல்லாம் புதிதாகத் திருப்பணிகளும் திரு விழா முதலான சிறப்புகளும் செய்விக்கவும் கட்டளையிட்டு, பின்பு தாம் முன் தேடிவைத்த திரவியத்தைத் தெரியக் கண்டு கொண்டவனைப்போலத் திரை மறைவிலிருந்த அச்செல்வக் குழந்தையை வெளிப்படக்கண்டு மனமகிழ்ச்சியடைந்து இளஞ் சூரியோதயம்போல இந்தப் புத்திரன் இவ்விடத்தில் உதயஞ்செய்தது சிவானுக்கிரகமேயல்லது வேறல்லவென்று வியப்படைந்து, சோதிட சாஸ்திரங்களில் வல்லமையுள்ள பெரியோர்களைக் கொண்டு ஒப்பற்ற செல்வம் கல்வி வெற்றி முதலிய அதிர்ஷ்டங்கள் நடனஞ் செய்கின்ற சாதக பலனைக் கறித்து, தியாகராஜப் பெருமானது திருவருளால் வந்ததுபற்றி அக்கடவுளின் திருப்பெயர் கொண்டு வீதிவிடங்கள் என்னும் நாமகரணமும் அன்னப்பிராசனம் சௌளம் முதலான சடங்குகளும் மிகுந்த விபவமாகவும் வேதயுக்தமாகவம் அது அது செய்யத்தக்க பருவங்களில் செய்வித்து, அந்தப் புதல்வனை வாச நீராட்டுவித்தும், இனிய உணவுகளை ஊட்டுவித்தும், பொன்னாலும் இரத்தினங்களாஞ் செய்த பூஷணங்களைப் பூட்டுவித்தும், மார்மேலும் தோள்மேலும் மடிமேலும் வைத்து வைத்து முத்தாடியும் திருந்தாத குதலைச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தும், கற்பக விருக்ஷத்தின் கனியைக் கேட்கினும் அந்தக் கணமே தருவித்துக் கொடுத்தும், சிறிய விளையாடல்களைச் செய்யக் கண்டுகளித்தும், கற்புள்ளவன் கணவனை உபசரிப்பதுபோல் உபசரித்தும், படிப்பில் ஆசையை வைத்தவன் பாடத்தைப் பாராட்டுவது போலப் பாராட்டியும், தன்னை உயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பதுபோல வளர்த்தும், முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தும், புத்திரசம்பத்தினால் வரும் பயனை அடைந்தவரா யிருந்தார்.
இந்தப்படி இணையில்லாத செல்வப் பெருக்கத்தினால் வளர்க்க வாழையிளங் குருத்துப் போல வளர்ந்து வருகின்ற புத்திரனுக்கு, ஐந்தாம் வயதில் அட்சராப்பியாசஞ் செய்வித்து, ஏழாம் வயதில் சகல தேசத்தரசர்களுக்குந் தெரிவித்து, நகரை அலங்காரஞ் செய்வித்து பத்மராகம் கோமேதகம் வயிம் வைடூரியம் முதலான இரத்தினகசிதமான கல்யாண மண்டபத்தில் வேத வேதாங்கங்களில் வல்லவரான பிராமணர்களும் சாபானுக்கிரக சாமர்த்தியமுள்ள தபோதனர்களும் ஆசீர்வதிக்கவும் மன்னர் மண்டலீகர் பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் அமைச்சர் உறவினர் சினேகர் முதலானவர்கள் கண்டு களிக்கவும் சுமங்கலப் பெண்கள் சோபனம் பாடவும் பேரி, சங்கம், மிருதங்கம் முதலான மங்கல வாத்தியங்கள் முழங்கவும் நல்ல சுப முகூர்த்தத்தில் வேதவிதிப்பிரகாரம் உபநயன கல்யாணஞ் செய்வித்து, பலவகைத் தானங்களும் செய்து சகல வேதாகம சாஸ்திரங்களிலும் வல்லமையுள்ள ஆசாரியரைக் கொண்டு வித்தியாரம்பஞ் செய்வித்தார். சில நாள்களுக்குள்ளே வீதிவிடங்கனென்னும் அப்புத்திரனானவன் வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசாரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனாகி யானையேற்றம், குதிரையேற்றம், ரதாரோகணம், வில்வித்தை, வாள்வித்தை இந்திரஜாலம், மகேந்திரஜாலம் முதலான ஸமஸ்த வித்தைகளையுங் குறைவறக் கற்றுக்கொண்டு, ஆதிசேடனைப்போல் அறிவும், காமனைப்போல் கட்டழகும், ஆண்சிங்கம் போல் ஆண்மையும், மதயானைபோல் நடையும், மார்த்தாண்டன்போல் வாய்மையும், கற்பகவிருக்ஷம்போல் கொடையும் உடையவனாகி; சிவபக்தி, சீவகாருண்ணியம், பொறுமை, அன்பு, ஆசாரம், ஒழுக்கம் ஊக்கம், சாந்தம், சற்சனநேயம் முதலான நற்குணங்களுடன் உயிர்க்கு முடிவு நேரிடுமானாலும் உண்மையே பேசுவதும், உறுதியே சொல்லுவதும், இன்சொல்லே கூறுவதும், இதமே செய்வதும், பயனுடளள காரியங்களை பாராட்டுவதும், பிராமணர் தவத்தோர் முதலான பெரியோர்களைக் கண்டால் அன்போடும் அச்சத்தோடும் எதிர்கொண்டு தலையால் வணங்கி வாயால் வாழ்த்துவதுமாகிய நற்செய்கைகளைப் பெற்று மாதா பிதாக்களது மனக்குறிப்பறிந்து அவர் இச்சையின்வழி நடந்து மகிழும்படி செய்வித்து, இளமைப் பருவத்திற்றானே எல்லாம் அறிந்தவனாகி, கண்டோர் கொண்டாடவும் கேட்டோர் மனங் களிக்கவும், இளவரசுப் பட்டத்துக்குத் தகுந்த பருவத்துட னிருந்தான்.
அப்படியிருந்த நாள்களில் ஒருநாள் அவ் வீதிவிடங்கனென்னும் இராஜபுத்திரன் தன் பருவத்துக்கொத்த இராஜகுமாரர்களும் மந்திரிகுமாரர்களும் சூழ்ந்துவர தன் பிதாவாகிய மனுச்சோழருடைய சமுகத்துக்கு வந்து பிதாவினது திருவடிகளுக்கு அஷ்டாங்க பஞ்சாங்கமாகத் தண்டனிட்டு எழுந்து து‘சொதுக்கியும் உடம்பொடுக்கியும் கைகட்டியும் வாய்புதைத்தும் எதிரே நிற்க அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் நெடுநாள் பிரிந்திருந்த கன்னறினைக் கண்ட பசுவைப்போலவும் இடந் தெரியாதிருந்த புதையலை யெதிர்ப்படக் கண்டவனைப் போலவும் கண்கள் களிகூரக் கண்டு, உள்ளமும் உடலும் பூரித்துக் தமது இரண்டு கைகளாலும் தழுவி அணைத்தெடுத்து மடிமேல் வைத்து உச்சிமோந்து முதுகைத் தடவி "எனக்கு நெடுநாளாக விருந்த மனக்குறையைத் தவிர்த்து இம்மை மறுமைப் பயனைக் கொடுக்கும்படி பிறந்த அருமையாகிய அமுதத்தை யொத்த என் புத்திரனே! உன் மனதில் ஏதோவொரு எண்ணமுண்டானதாகத் தோன்றுகின்றது; அவ்வெண்ணம் இன்னதென்று வெளிப்படுத்த வேண்டும்" என்று கேட்க, அது கேட்ட வீதிவிடங்கன் "மூன்றுலகத்திலுங் கேடில்லாத கீர்த்தியை நாட்டிய பெருந்தன்மையுடைய தேவரீரைப் பிதாவாகப் பெற்ற அடியேனுக்கு எண்ணங் கொள்வதற்கு என்ன குறையிருக்கின்றது? நமது குலதெய்வமாகியும் இஷ்ட தெய்வமாகியும் கமலாலயத்தில் எழுந்தருளிய தியாகராஜப் பெருமானைத் தரிசித்துவர வேண்டுமென்னும் எண்ணம் ஒன்றுமாத்திரமுண்டு; இவ்வெண்ணம் இடையூறில்லாமல் நிறைவேறும்படி தேவரீர் திருவுள்ளங் கொள்ளவேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்தான்.
அது கேட்டு அரசானாவர் "சர்வ வல்லமையுள்ள சுயம்புவாகியும் கருணைக்கடலாகிய கடவுளாகியும் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானாகியும் விளங்கிய தியாகராஜப் பெருமானைச் சேவிப்பதற்குத் தடையுண்டோ? தனக்கிணையில்லாத தரும மூர்த்தையைத் தரிசிக்க வேண்டுமானால் தடுப்பவர் யார்? புண்ணியந் தேடப் புத்திரன் தொடங்கினால் தந்தை தடை செய்வானோ? நானே கற்பிக்கவேண்டிய நல்விஷயத்தை நீயே தெரிந்து செய்யத் தொடங்குவது நான் பூர்வஞ்செய்த புண்ணியமல்லவோ? 'பிள்ளை தேடும் புண்ணியம் பிதாவுக்கும் உண்டு' என்று பெரியோர் சொல்வது பிழைபடாதென்பதை நானறியனோ? நெல் முதலான பயிர்க்கு நீர்விடுவோரையும், குருடர்க்குக் கோல் கொடுப்போரையும், இரவில் வந்தவர்க்கு இடங் கொடுப்போரையும், அஞ்சி வந்தடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், தாகங் கொண்டோர்க்குத் தண்¬ர் கொடுப்போரையும், பசிகொண்டு பரிதபிப்போர்க்கு அன்னங் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரங்கட்டித் தருமஞ் செய்வோரையும் தடுத்தாலும், குருதரிசனம் சிவஞானிதரிசனம் சிவதரிசனம் செய்வோரை ஒருகாலுந் தடுக்கப்படாது; ஆதலால் புத்திரனே உனக்குவேண்டிய சிறப்புக்களுடன் சுகமாய்ப்போய் ஆண்டவனைத் தரிசனஞ் செய்து சிவஞானமும் தீர்க்காயுளும் பெற்று வருவாய்" என்று கட்டளையிட்டார்.
அந்தக் கட்டளையை அன்புடன் தலைமேற்கொண்டு வணங்கி விடைபெற்று, மாதாவினிடத்தில் போய்ப் பக்தியுடனே பணிந்தெழுந்து கைகூப்பி நின்று "அநேக விரதங்களை அனுஷ்டத்து அடியேனைப் பெற்றெடுத்து, கண்களை இமைகள் காப்பதுபோற் காத்து வளர்த்த தாயே! அடியேன் தெய்வ சிகாமணியாகிய தியாகராஜப் பெருமானைத் தரிசனஞ் செய்யவேண்டும்; இதற்குத் தந்தையாருடைய சம்மதம் பெற்றுக்கொண்டேன்; இனி உமது உள்ளமும் ஒருமித்தருளவேண்டும்" என்று குறையிரந்துகொண்டான். அதுகேட்ட தாயானவர் உருக்கத்துடன் மனமகிழ்ச்சி கொண்டு முகமலர்ந்து முலைகளிலிருந்து பால் பீரிடவும் கண்களில் ஆசை நீரரும்பவும் தம் அருமைத் திருமகனை நோக்கி "இறைவனையும் என்னையும் நற்கதியிற் சேர்க்கவந்த நாயகமே! நாங்கள் முன்செய்த தவப்பயனாலே கிடைத்த முத்தமே! எங்கள் வருத்தமெல்லாந் தீர்க்கவந்த மாணிக்கமே! சிறந்த கண்மணியே! சுந்தர வடிவமுள்ள சூரியனே! சாந்தகுணமுள்ள சந்திரனே! பேரறிவுடைய பிள்ளாய்! நெடுநாளாகப் பலவிதமான தருமம் தானம் தவம் முதலானவைகளைச் செய்தும் பெற்றுக்கொள்ளாமல், தியாகேசர் சந்நிதிக்கு நடந்து அந்தக் கடவுளின் அனுக்கிரகத்தால் உன்னைப் பெற்றுக்கொண்டோம். அப்படிப்பட்ட பெருங்கருணையுள்ள பெருமானை நீ தரிசிக்கவேண்டுவது அடுத்த காரியந்தான். ஆதலால் நீ போய்க் கண்குளிரக் கண்டு தரிசித்து, 'உபநயனம் முதலான மங்கலக் கோலங்கண்ட நமது கண்கள் மணக்கோலமுங் கண்டு களிப்படைய வேண்டும்! என்று எண்ணியிருக்கிற என்னெண்ணம் விரைவில் முடியும்படி ஒரு வரத்தையும் பெற்றுவரக்கடவாய்" என்று விடை கொடுத்தார்.
அவ்விடையைப் பெற்றுக்கொண்ட வீதிவிடங்கன் தன் அரண்மனைக்கு வந்து, தைலம், சந்தனம், கஸ்து‘ரி, பால், தயிர், நெய், பழம் முதலான அபிஷேக திரவியங்களும்; மாணிக்கமாலை, மரகதமாலை, முத்துமாலை, பவளமாலை, பொன்மாலை, வச்சிரமுடி, இரத்தினகுண்டலம் முதலான திருவாபரணங்களும்; கொன்னைமாலை, தும்பைமாலை, வில்வமாலை, சண்பகமாலை, முல்லைமாலை, மல்லிகைமாலை முதலான திருமாலைகளும்; வெண்பட்டு, கோசிகப்பட்டு, பீதாம்பரம் முதலான திருவாடைகளுடத, மற்றும்வேண்டிய திரவியங்களெல்லாமும் தியாகேசர் கோயிலுக்குக் காரியக்காரர்கள் வசத்தில் முன்னதாக அனுப்புவித்து, பின்பு தான் மஞ்சனச்சாலையில் வாச நீராடி வெண்பட்டுடுத்துச் சிவத்தியானத்துடன் திருநீறு தரித்துத் திலகமணிந்து கிரீடம், குண்டலம், கண்டசரம், வாகுவலயம், பதக்கம், சரப்பளி, கடகம், ஆழி, பொற்பூணுநு‘ல், பொன்னரைஞாண், உதரபந்தனம், வீரகண்டை முதலான பூஷணங்களும், பூண்டுகொண்டு ஜோதிமயமான பீதாம்பர உத்தரியம் மேலே தரித்துக்கொண்டு நவரத்தினமிழைத்தவொரு பொற்பிரம்பைக் கையில் பிடித்துக்கொண்டு, அரண்மனைவாசலை விட்டு வெளியே புறப்பட்டு, வேத பாரகராகிக வேதியர்முதலானவர்களுக்குப் பலபலதானங்கள் செய்து, மனோவேகமும் பின்னடையத்ததக்க வேதமான நடையுள்ள நான்கு குதிரைகளைக் கட்டிய மகாமேருவைப் போல உயர்வுள்ள ரத்தின கசிதமாகிய ரதத்தின்மேல் ஆரோகணித்துக்கொண்டு வேதவேதியர், மீமாம்சகர், தார்க்கீகர், வையாகரணர், சோதிடர், ஆயுள்வேதியர், வேதாந்தியர், ஆகமசித்தாந்தர், புராணிகர், சமய சாஸ்திரப் பிரசங்கர் முதலான காரியத்தலைவர்களும்; சினேகர், உறவினர், புரோகிதர் முதலானவர்களும்; மன்னர், மண்டலீகர், பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் முதலான அரசர்களும் தங்கள் தங்கள் பெருமைக்குத் தக்க வாகனங்களிலேறிச் சூழ்ந்துவரவும், நெற்றிப்பட்டம் கிம்புரி முதலான அணிகளை அணிந்து அலங்காரஞ் செய்து மதயானைகள் கர்ச்சித்து வரவும், முத்துக்குஞ்சம் முத்துவடம் முத்துவாளி கிண்கிணிமாலை பொற்கலனை முதலான அணிகளால் அலங்கரித்த வலியுள்ள குதிரைகள் கனைத்து வரவும், வீரபட்டம் வீரசங்கிலி வீரகண்டை முதலான அணிகளை யணிந்த வீரர்கள் ஆரவாரித்து வரவும், மங்கலப்பாடகர் பாடவும், வந்தியர் மாகதர் புகழவும், மங்கல மங்கையர் வாழ்த்தவும், நாடகக் கணிகையர் நடனஞ்செய்யவும், பட்டாங்கு படிக்கவும், கட்டியங் கூறவும், அஷ்டமங்கலங்களை ஏந்திச் சுமங்கலிகள் சூழ்ந்து போகவும், வெள்ளை வட்டக் குடைகள் நிழற்றவும், வெண்சாமரை வீசவும், மயிற்குஞ்சங்கள் சுழற்றவும், பூந்தட்டேந்தவும் பேரிகை, தம்பட்டம், தக்கை, உடுக்கை, சச்சரி, தாளம், மத்தளம், தாரை, சின்னம், மல்லரி, சங்கம், எக்காளம், ருத்திரவீணை, நாரதவீணை, தும்புருவீணை, இராவணாஸ்தம், கின்னரி, புல்லாங்குழல் முதலான தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, நரப்புக்கருவி என்கின்ற ஐவகையான முப்பத்திரண்டு வாத்தியங்களும் முழங்கவும், தேரிற்கட்டிய மணிகளினோசை க¬ர்க¬ரென்று சத்திக்கவும், ஆடுகின்ற மாதரது அடிகளிற் பூண்ட சிலம்போசை கலீர்கலீரென்று ஒலிக்கவும், சகல மங்கல சம்பிரம ஆடம்பரங்களுடன், மாளிகைகளின் வாயில்கள்தோறும் மலர்ப்பந்தரிட்டு மணிமாலைகள் து‘க்கி வாழை கமுகுகள் நாட்டி மெழுகிக் கோலமிட்ட திண்ணைகளில் பூரண கலசங்களும் பொற்பாவைகளும் முளைப்பாலிகைகளும் முகவிளக்குகளும் வெண்சாமரைகளும் இணைக்கயல்களும் கண்ணாடிகளும் பூந்தட்டுகளும் மங்கலமாக வைத்து அலங்கரித்தும் பரிமள திரவியங்களைக் கலந்த பனிநீர் தெளித்துத் து‘ளியெழும்பால் களஞ்செய்தும் ஆடல்பாடல் முதலான விநோதங்களைக் கொண்டு விளங்கிய வீதியினிடத்து தேவேந்திரன் தியாகராஜ தரிசனஞ் செய்யப்போவது போல அவ் வீதிவிடங்கனென்னும் இராஜகுமாரன் தேரை நடத்தனான்.
அப்பொழுது, இரதி இந்திராணி முதலான தேவமாதர்களை யொத்த அவ்வீதியிலுள்ள ஸ்திரீ ஜனங்களெல்லாம் அப்புத்திரனைக் கண்டு மணமுள்ள மலரை வண்டுகள் சூழ்ந்ததுபோலவும் இனிய சுவையுள்ள தேனை ஈக்கள் சுற்றியதுபோலவுஞ் சூழ்ந்துகொண்டு, கலை நெகிழ்ந்தும், கைவளை சோர்ந்தும், கண்¬ர் ததும்பியும், குழல் அவிழ்ந்தும், கொங்கைகள் விம்மியும், பசலைபோர்த்தும் மையலடைந்த மனத்தவர்களாய், "கரும்பை வில்லாகவுடைய காமனைப் பார்க்கிலும் எண்மடங்கு அழகுடைய இளவரவே! கன்னிகைப் பருவம் உள்ளவளே நான்; என்மேற் கடைக்கண் செய்யாயோ?" என்றும், "எழுதப் படாத சுந்தர வடிவமுள்ள இளங்காளையே! புருஷர் முகம் பாராத பூவையே நான்; என்னைப் புணர்ந்து போகாயோ? என்றும் "கண்களுக்கு நிறைந்த கட்டழகனே! காவல் அழியாத காரிகையே நான்; என்னைக் கலந்து போகாயோ?" என்றும், "சுபலக்ஷணங்கள் நிறைந்த சுந்தர வடிவனே! கல்யாணமில்லாத கன்னிகையே நான்; என்மேல் கருணை செய்யாயோ?" என்றும், "மனுச்சக்கரவர்த்தி பெற்ற மதயானையே! சிறுவயதுள்ளவளே நான்; என்னைத் திரும்பிப் பாராயோ?" என்றும், "அதிசயிக்கத்தக்க அழகனே! நிறையழியாத நேரிழையே நான்; சற்றே நின்று போகாயோ?" என்றும், இந்த நாஜபுத்திரனுக்கு வீதிவிடஙகனென்று பெயரிட்ட பெரியோர்க்கு அனந்தந்தரம் அடிக்கடி தெண்டனிட்டாலும் போதாதே" என்றும், "வாசமுள்ள தைலம் பூசி மணமுள்ள மலர்மாலை சூழ்ந்து வாழைப்பூ இதழ்போல் வகிர்ந்து குயில்முகம் போல முடியிட்டுப் பளிங்குச் சிமிழ்க்குள்ளிருந்து தோன்றுகின்ற பருத்த நீலக்கல்போல் தாவள்ளியமான தலைச்சாத்துக்குள்ளிருந்து சிறுகித் தோன்றுகின்ற குடுமியும், பார்க்கின்றவரது பார்வைக்கு இன்பந்தருகின்ற தோற்றமும் மாறாத மலர்ச்சியும் மனோரஞ்சிதமான அழகும் குளிர்ச்சியும் ஒளியும் பெற்றுச் செந்தாமரை மலர்போல் விளங்கும் முகமும், கருமை மிகுந்து செம்மை கலந்து காருண்ணியந் ததும்பி இங்கிதமறிந்து சிறிதே இமைத்து மனோலம்மியமாய் மலர்போன்று நீண்ட கண்களும் ஒளிகொண்டு உயர்ந்த நீண்ட நாசியும், குண்டலமணிந்து நீண்டு அகன்ற செவியும், திரிபுண்டரந் தரித்துத் திலகந்தீட்டி அழகு பெற்று அகன்று உயர்ந்த நெற்றியுங்ம, பவளம்போற் சிவந்து திரண்ட உதடும், முல்லை யரும்புகள் போலச் சிறுகி நெருங்கி ஒளிவீசும் பற்களும், குறுகி மென்மையாகிச் சிவப்பேறிய நாவும், கண்டசரம் முதலான ஆபரணங்களை அணிந்து வலம்புரிச்சங்குபோல் திரண்ட கண்டமும், மத்தளம் போலத் திரண்டு மந்தர மலைபோல உயர்ந்து கண்டோர் கண்களையுங் கருத்தையுங் கட்டுகின்ற சுகந்தமாலை யணிந்த வெற்றியுள்ள தோளும், வீணைத்தண்டுபோல நீண்டு தாழ்ந்து கடகமணிந்த கையும், தாமரை மலர்போற் சிவந்து மிருதுவாகி மழைபோற் சொர்ணம் பொழிகின்ற முன்கையும், விளக்கமிகுந்து பதக்க முதலானவை அணிந்து களபகஸ்து‘ரிகள் பூசிக் கண்ணாடிபோல அகன்று மலைபோல உயர்ந்த மார்பும், சிறுகி உயர்ந்த வயிறும், ஆழ்ந்து அழகு பெற்ற உந்தியும், யானைத் துதிக்கை போன்று திரண்ட தொடையும், வட்டந் தோன்றாது தசைகொண்டு செழிப்புள்ள முழங்காலும், திரண்ட நீண்ட கணைக்காலும், தாமரை மலர் போன்று வீரகண்டை யணிந்த கால்களுடத, வரம்பு கடவாத வடிப்பமுள்ள வடிவமு முடைய இந்த இராஜபுத்திரனைக் கண்டு களிப்பதற்கு நானென்ன தவஞ் செய்தேனோ!" என்றும், "இராஜ சிங்கமாகிய இந்தக் குமரனைச் சிருஷ்டித்தவன் பிரமதேவனே யானால் இவனழகுக்குத் தக்க மாதினை இனி எங்கே உண்டுபண்ணுவானோ!" என்றும், "இவ்வழகனது வடிவைக்கண்டால் உருகாத கருங்கல்லும் உருகுமானால் பேதைமையுள்ள பெண்கள் மனம் உருகாதிருக்குமோ!" என்றும் "இவனது பூர்ணசந்திர பிம்பம் போன்ற புன்னகையொன்றுமே மூன்றுலகத்திலுமுள்ள பெண்களுக்கெல்லாம் பித்தேற்றுமே!" என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லி மோகங்கொண்டு நின்றார்கள்.
அவ்வீதியிலுள்ள வாலிபர் வார்த்திபர் முதலான புருஷ ஜனங்களெல்லாங் கண்டு, "ஆ! ஆ!! இந்தப் புத்திரனே இராஜ புத்திரன்; இவனுக்குமுன் மற்ற இராஜ புத்திரரெல்லாம் இராக்ஷச புத்திரரே" என்றும், "இவன் வடிவே வடிவு; இவன் வடிவுக்குமுன் மற்றவர் வடிவெல்லாம் மர வடிவே" என்றும், "இவன் கற்ற வித்தையே வித்தை; இவனுக்கு முன் மற்றவர் கற்ற வித்தையெல்லாம் மாயவித்தையே" என்றும், "இவன் குணமே குணம்; இவனுக்குமுன் மற்றவர் குணமெல்லாம் வில்லின் குணமே" என்றும், "இவனே இளவரசு; இவனுக்கு முன் மற்ற இளவரசெல்லாம் பூவரசே" என்றும், "இவனே சீமான்; இவனுக்குமுன் மற்றச் சீமான்களெல்லாங் கலைமான்களே" என்றும், "இவன் வீரமே வீரம்; இவன் வீரத்துக்குமுன் மற்றவர் வீர மெல்லாம் சவ்வீரமே" என்றும், "இவன் யௌவனமே யௌவனம்; இவன் யௌவனத்துக்கு முடன மற்றவர் யௌவனமெல்லாம் வெவ்வனமே" என்றும், "இவன் பாக்கியமே பாக்கியம்; மற்றவர் பாக்கியமெல்லாம் நிர்ப்பாக்கியமே" என்றும், "இவனைப் பெற்றவரே பெற்றவர்; மற்றவரெல்லாம் பெண் பெற்றவரே" என்றும், இந்தக் குணரத்தினமான புதல்வனைப் பெறுதற்கு நமது மகாராஜனும் அவரது மனைவியாரும் என்ன நோன்பு நோற்றாரோ" என்றும், "வெற்றியையுடைய வீரசிங்கம்போன்ற இந்தப் புத்திரனது திருமுகமண்டலத்தில் சாந்தந் ததும்புகின்றதே" என்றும், "இவனது வடிவில் அழகு ஒழுகுகின்றதே" என்றும், "நெடுநாளாகக் கண்டுகளிக்க வேண்டுமென்று எண்ணி எதிர்பார்த்திருந்த நமக்கு இன்று தியாகராஜப் பெருமான் திருவருளல்லவோ இந்த இராஜ புத்திரனை இவ் வீதியில் வரும்படி செய்தது? இனி அவ்வருளுக்கு என்ன கைம்மாறு செய்வோம்" என்றும், "இந்தப் புத்திரன் தியாகேசப்பெருமான் வரத்தினால் தோன்றினான் என்பதை இவனது அற்புதமான வடிவமே காட்டுகின்றதே என்றும், "நமதரசனுக்குச் சந்ததி யில்லாமையால் பிற்காலத்தில் உலகம் என்ன பாடுபடுமோ என்று எண்ணி இளைத்திருந்த நமது துன்பத்தையெல்லாம் நீக்கி இன்பத்தைக் கொடுத்த இப்புத்திரனுக்கு நாம் செய்யும் உபகாரம் ஒன்றுமில்லையே" என்றும், மனுச்சோழ மகாராஜனைப்போல நம்மையெல்லாம் பாதுகாத்து வருவானென்பதற்கு வேறே அடையாளம் வேண்டுமோ? இவனிடத்திற் கருணை துளும்புகின்ற கடைக்கண்களே காட்டுகின்றன" என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லிக் கொண்டு சூழ்ந்து நின்றார்கள்.
இந்தப் பிரகாரம் அவ்வவ் வீதியிலுள்ள ஸ்திரீ ஜனங்களும் புருஷ ஜனங்களும் பார்த்துப் பார்த்துப் பலவிதமாகப் புகழ்ந்து நெருங்க வீதிவிடங்கன் தேரிலேறிச் செல்லும்போது, ஒரு வீதியில், தேரிலே கட்டிய குதிரைகள் தேர்ப்பாகன் வசத்தைக் கடந்து தெய்வத்தின் வசமாகி, அதிவேகமாக அத்தேரை இழுத்துக்கொண்டு சென்றன. அத் தருணத்தில் தாய்ப்பசுவானது பின்னே வர முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங்கன்றானது 'இளங்கன்று பயமறியாது' என்ற மொழிப்படியே துள்ளிக்குதித்துக்கொண்டு எதிர் வந்து, இராஜகுமாரனைச் சூழ்ந்து வருகிற சனத்திரள்களுக் குள்ளே ஒருவருமறிந்து கொள்ளாதபடி ஊழ்வினையாற் கண்மயக்கஞ் செய்வித்து உட்புகுந்து, அதிவேகமாகச் செல்லுகின்ற தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு அரைபட்டு உடல் முறிந்து குடல்சதிந்து உயிர்விட்டுக் கிடந்தது.
உடனே அந்தப் பசுங்கன்று தனது தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கேட்ட வீதிவிடங்கன் இடியோசை கேட்ட நாகம் போலத் திடுக்கிட்டு, நடுநடுங்கித் தேரிலிருந்து கீழே விழுந்து, எண்ணப்படாத துன்பத்தோடும், பயத்தோடும் எழுந்துபோய் அப் பசுங்கன்று இறந்து கிடப்பதைக் கண்டு, மதிமயங்கி மனம் பதைத்துக் கையுங்காலும் நடுக்கெடுத்துப் பெருமூச்சுவிட்டு உடம்பு வியர்த்துச் சோபமடைந்து விழுந்து, சிறிதே தெளின் தெழுந்து கண்களிலே நீர் ஆறாகப் பெருக நின்று, "சிவசிவா! சிவசிவா!! சங்கரா! சங்கரா!! சம்புவே! சம்புவே!! மஹாதேவா! மஹாதேவா!! தியாகராஜப்பிரபு! தியாகராஜப்பிரபு!! தேவரீ€த் தரிசிக்கவேண்டு மென்று வந்த அடியேனுக்கு இப்படிப் பட்ட இடரும் வரலாமா? நன்றறியாத பாவி இவன் நம்மைத் தரிசிக்கத் தக்கவனல்ல னென்று திருவுளங் கொண்டு தானோ என்னை இந்தப் பழிக்கு ஆளாக்கியது? தேவரீரைத் தரிசனஞ் செய்ய எண்ணி வந்த அடியேன் கால்வருந்த நடந்து பயபக்தியுடனே வந்து தரிசிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல், செல்வச் செருக்கினால் தேரிலேறிக் கொண்டு ஆடம்பரங்களுடன் பக்தியில்லாது பகல்வேஷக்காரன் போல டம்பவேஷங் காட்டி வந்த அன்பில்லாத பாவியாகிய என் பிழையைக் குறித்து நோவதல்லது, எம்பெருமானிடத்திற் குறை சொல்லத் தகுமோ? இப்படிப்பட்ட பெரும்பாதகம் செய்யத்தானோ பிள்ளையாகப் பிறந்தேன்? விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்ததுபோல் மறைநெறி தவறாத மனுவின் வமிசத்தில் எதிரற்ற பாவியாகிய நான் ஏன் பிறந்தேன்? பழிபாவங்களைக் கனவிலும் கண்டறியாத மனுச்சோழராகிய என் பிதாவுக்குப் பெரும்பழியைச் சுமத்தத்தானோ பிறந்தேன்? சிவபெருமானைத் தரிசித்துச் சீர்பெறலாமென்று எண்ணி வந்த எனக்குச் சிவதரிசனங் கிடையாது தீராப்பழி கிடைத்ததே! ஓகோ! 'எண்ணம் பொய்யாகும் ஏளிதம் மெய்யாகும்' என்ற வார்த்தை என்னிடத்திலே இன்று அனுபவப்பட்டதே! ஐயோ! நான் கற்ற கல்வி யெல்லாம் கதையாய் முடிந்ததே; நான் கேட்ட கேள்வியெல்லாம் கேடாய் முடிந்ததே; நான் அறிந்த அறிவெல்லாம் அவலமாய் விட்டதே; நான் தெளிந்த தெளிவெல்லாம் தீங்காய் விட்டதே! அரஹரா! இப்படிப்பட்ட தீங்கு வருமென்று அறிந்தால் தேரிலேறேனே, பசுவைக் கொலை செய்வதே பாவங்களி லெல்லாம் பெரும் பாவம், அதைப் பார்க்கிலும் பசுங்கன்னைக் கொலைசெய்வது பஞ்சமா பாதகத்தினும் பதின்மடங்கு அதிகம் என்று பெரியோர் சொல்லக் கேட்டறிந்திருக்கிற நான் இன்று அந்தப் பாதகத்துக்கு ஆளாகியும் உயிரை விடாமல் உடலைச் சுமந்திருக்கின்றேனே; இளங்கன்று எதிரே வரவும் அதைப்பாராமல் அதன்மேற் தேரை நடத்தியது செல்வச் செருக்கல்லவோ என்று உலகத்தார் பழிக்கும் பழிக்கத்தான் உடம்பெடுத்தேன்; நான் புத்தி பூர்வமாக எள்ளளவாயினும் அறிந்திருப்பேனானால் இப்படிப்பட்ட அபாயம் நேரிடவொட்டேன்; என்ன செய்வேன்! என்ன செய்வேன்!! மனுச்சோழர் காலத்தில் அவர் புத்திரன் ஒரு பசுங்கன்னைக் கொன்றான் என்னும் பழிமொழியை உலகத்தில் நிலைபெற நாட்டினேனே! நீதி தவறாது உலகத்தை யெல்லாம் ஆளுகின்ற மனுச்சக்கரவர்த்தி யென்னும் மகாராஜனுக்குப் பிள்ளையாகப் பிறக்கும்படி இருந்த நல்வினை இப்போது பேயாகப் பிறப்பதற்குத் தக்க தீவினையாய் விட்டதே! இந்தப் பிறப்பிலே இப் பழியை ஏற்றுக் கொள்வதற்கு முன் பிறப்பில் என்ன பாவஞ் செய்தேனோ? து‘ய்மையுள்ள சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப்பின் வழிவழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர், திருநீற்றுச்சோழர், காவிரிகரைகண்ட சோழர், மனுநீதிச்சோழர், இராஜேந்திரசோழர், இராஜசூடாமணிச்சோழர், இராஜராஜசோழர், உறையூர்ச்சோழர், மண்ணளந்தசோழர், கங்கைகொண்ட சோழர், தேவர்சிறைமீட்ட சோழர், மரபுநிலைகண்ட சோழர், எமனைவென்ற சோழர், சுந்தரச்சோழர், மெய்ந்நெறிச் சோழர் முதலான என் மூதாதைகளான முன்னோர்களெல்லாம் தீமையைச் சேராது செங்கோல்நடத்தி அடைந்த கீர்த்தி இக்காலத்தில் எடுக்கப்படாத பழியைச்சுமந்த என்னால் மறைந்து போகும்படி நேரிட்டதே! ஐயோ! இதை எண்ணும்போது, நான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பானேனே! மரபழிக்கவந்த வச்சிராயுதமானேனே! கன்றுக்குப் பாலு‘ட்டாதவனைக் கண்டாலும் பாவமென்று சொல்லுகிற பெரியோர்கள் சேங்கன்றைத் தேர்க்காலிலிட்ட என்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? இந்தக் கன்று எங்கே பிறந்ததோ? எங்கே வளர்ந்ததோ? எங்கே போக எண்ணியதோ? இங்கே வந்து இறக்க நேரிட்டதே! சுந்தரமுள்ள இக் கன்று இறந்ததைக் கண்ட எனக்கே இவ்வளவு துக்கமுண்டாயிருக்கின்றதே! இதை ஈன்ற தாய்ப்பசு கண்டால் என்ன பாடு படுமோ? இச் செய்தியை என் பிதாவானவர் கேட்பாரானால் ஏதாய் முடியுமோ? வார்த்தைமாத்திரத்திலே பழியென்று சரசஞ் செய்கின்றவர்களையுந் தண்டிக்கின்ற தந்தையார் திருமுகத்தில் தகுதியல்லாத பழியைச் சுமந்து தண்டனைக்காளாகிய நான் எவ்வாறு விழிப்பேன்? இனி இவ்வுலகில் பழிக்காளாகி உண்டுடுத்து உலாவி உயிர் வைத்திருக்க மாட்டோன்; இன்றே என்னுயிரை இழந்துவிடுகிறேன்!" என்று பலவிதமாகப் பரிதபித்து, துக்க சமுத்திரத்தில் அழுந்திக் கரை காணாதவனாகி நின்றபோது, உடன் சூழ்ந்துவந்த அந்தணர் அமைச்சர் முதலானோர் ராஜகுமாரனைப் பார்த்துத் தாமும் விசனமடைந்தவர்களாய், "ஓ விவேகமுள்ள வீதிவிடங்கனே! நீர் என்ன கெடுதி நேரிட்டதென்று இப்படிப் பிரலாபிக்கின்றீர்? அந்தப் பசுவின் கன்றை நீர் கொல்லவேண்டு மென்று கொன்றீரோ? அல்லது அந்தக் கன்று தேர்க்காலில் அகப்படுவதை அறிந்தும் அஜாக்கிரதையாயிருந்தீரோ? அக்கன்று ஓடிவந்ததைச் சூழ்ந்திருந்த நாங்கள் ஒருவரும் அறியோமே; நீர் எப்படி அறிவீர்? அது கர்மவசத்தாலே எல்லார் கண்களிலும் மண்களைத் துவி வலிய வந்த மடிந்ததே; அதற்கு நீர் என்ன செய்வீர்? மிருக ஜாதிகளிலே உயர்வுள்ள பசுவின் கன்று இறக்கநேரிட்டதே யென்று எண்ணி யெண்ணிச் சோர்ந்து போகின்றீர். ஆனால் அதற்கென்ன செய்வோம்? பொன்கத்தி என்று கழுத்தரிந்து கொள்ளலாமோ? இதனால் நமக்குப் பழி பாவம் ஒன்றுமில்லை; ஆயினும் இதுபற்றி உமது மனது ஆலைபாய்ந்து அவலங் கொள்ளுகின்றபடியால், வேதத்தில் விதித்திருக்கின்ற பிராயச்சித்தங்களுள் இதற்குத் தக்கது எதுவோ அதைக் கேட்டறிந்து செய்து கொள்ளலாம்; நீர் சித்தங் கலங்காமல் தேரிலேறும்" என்று சொன்னார்கள்.
அதுகேட்ட வீதிவிடங்கன் "நடுவாகப் பேசுகின்ற நல்லோர்களாக விருந்தும் காலவேற்றுமையால் கருத்துவேறுபட்டு முகநட்பாகப் பேசி முகந்துடைக்கின்றவர்கள்போற் சொன்னீர்கள். இதென்ன ஆச்சரியம்! பூர்வம் எங்கள் வம்சத்தில் சிபிச்சக்கரவர்த்தி என்பவர் ஒருவர் ஒரு வேடன் துரத்திக்கொண்டு வரப்பயந்து அடைக்கலமாகப் புகந்த புறாவுக்கு அபயஹஸ்தஞ்செய்து, பின்பு அவ்வேடன் வந்து புறாவைக் கேட்டு வழக்கிட்டபோது, அந்தப் புறாவுக்கு ஈடாகத் தமது சரீரத்திலுள்ள மாமிசத்தை யெல்லாம் அரிந்தரிந்து தராசில் வைத்தும் நிறைகாணாமலிருக்க, அதுகண்டு தாமும் அந்தப் தராதசிலேறினார். அவர் பட்சி ஜாதிகளில் சாமானியப் பிறவியாகிய புறாவின் உயிர்க் கொலைக்கே அஞ்சித் தம் உடம்பைக் கொடுத்ததுமன்றி உயிரையுங் கொடுத்தாரானால், அப்பட்சி ஜாதிகளில் விசேடப் பிறப்பாகிய கருடன் முதரான உயிர்களினிடத்து எப்படிப்பட்ட காருண்ணியமுள்ளவராய் இருக்கவேண்டும்? அதனினும் உயர்ந்த மிருக ஜாதிகளில் எவ்வகைப்பட்ட கிருமையுடையவராய் இருக்கவேண்டும்? அதனினம் அம்மிருக ஜாதிகளில் விசேடமாகிய பசுக்களினிடத்தில் எப்படிப்பட்ட இரக்கமுள்ளவராய் இருக்கவேண்டும்? அதனினும் பசுவின் கன்றுகளிடத்தில் எவ்வகைப்பட்ட தயவுள்ளவராய் இருக்க வேண்டும்? அப்படிப்பட்டவருடைய வம்சத்தில் நான் பிறந்தும், இன்று வீதியில் வரும்போது யாரோ பயங்காட்டித் துரத்த, அதனால் நடுங்கி என்னெதிரே அடைக்கலமாகத் துள்ளியோடி வந்த இந்தப் பசுங்கன்றை அபயஹஸ்தங் கொடாமல், அநியாயமாகத் தேர்க்காலில் அகப்பட்டிறந்துபோகச் செய்தேனே! இப்படிப்பட்ட என்னை என்ன செய்தால் தீரும்? என்னை இதற்குத்தக்க பிராயச்சித்தஞ் செய்து கொள்ளும்படி சொன்னீர்கள்; எங்கள் வம்சத்திலிருந்த அரசர்கள் இரக்கத்துடன் நீதி தவறாது அரசு செலுத்தி வந்த கிரமத்தையும், என் பிதாவாகிய மனச்சோழர் நடுநிலை தவறாமல் எவ்வுயிர்களையும் தம்முயிர்போலப் பாதுகாத்து வருகின்ற முறைமையையும், அரசர்க்குக் கோபூசை செய்வது கடனென்ற வேதவாக்கியத்தையும், அரசர் பசுக்களுக்கு யாதொரு குறைவும் நேரிடவொட்டாமல் மிகுந்த ஜாக்கிரதையுடன் விருத்தி செய்விக்க வேண்டுமென்கிற பெரியோர் வாக்கியத்தையும், ஐயோ! எங்கே அனுப்பிவிட்டு இங்கே பிராயச்சித்தஞ் செய்து கொள்ளுவேன்!" என்று துயரத்துடன் சொல்லினான்.
அதுகேட்ட அவ்வந்தணர் முதலானவர்கள் "வாராய் இராஜபுத்திரனே! நாங்கள் முகத்துக் கிச்சையாக முன்னொன்று பேசிப் பின்னொன்று சொல்லுகின்றவர்களல்ல; நெடுநாளாக எங்களுடன் பழகியிருந்தும் எங்கள் சுபாவம் இன்னமும் உமக்கு நன்றாகப் புலப்படவில்லை என்று தோன்றுகின்றது. உலகம் தலைகீழாகுமானாலும் உள்ளபடி சொல்லுவோமே யல்லது புதிதாகத் தொடுத்துப் பொய் பேசமாட்டோம். நாங்கள் சொல்லும் வார்த்தையில் நம்பிக்கை வைத்துக் கேட்கக் கடவீர். அந்தப் பசுங்கன்று ஒருவர் துரத்த அதனால் பயந்து அடைக்கலமாக வேண்டுமென்கின்ற அறிவோடு உமக்கெதிரே ஓடிவந்ததல்ல; அல்லது தானே துள்ளிக்குதித்து ஓடிவந்தததுமல்ல; அதை இன்னவிடத்தில் இன்ன காலத்தில் இன்னபடி இறக்குமென்று விதித்திருந்த அதன் தலைவிதியே அதனைத் துரத்திக்கொண்டுவந்து தேர்க்காலில் அகப்படுத்திச் சிதைந்துவிட்டது; அதன் விதி அப்படியிருக்க நீர் வீணாக விசனப்படுவதில் என்ன பலன்? 'கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டுபோகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டங் கொடுத்தான்' என்னும் பழமொழிபோல அதனுயிரே விதி கொள்ளை கொள்ள உம்முயிரைத் தண்டங் கொடுப்பதேன்? நீர் ஒன்றுக்கும் அஞ்சாமல் தேரிலேறும்" என்று சொன்னார்கள்.
அதுகேட்டு ராஜபுத்திரன், "சிவதரிசனம் செய்ய எண்ணித் தேரிலேறும்போதே கால்தவறியும் இடது தோளும் இடது கண்ணும் துடித்தும் காட்டிய உற்பாதங்களை ஆலோசியாமல் புறப்பட்ட என்மதியை நினைத்துத்தான் துயரப்படுவேனோ! அரசர் குலத்திற் பிறந்தும் என்னை இழிகுலத்தார் செய்யும் செய்கையைச் செய்வித்த என்விதியை நினைத்துத்தான் துயரப்படுவேனோ! மாசில்லாத சூரிய குலத்துக்கு மாசுண்டாகும்படி செய்ததைக் குறித்துத் துயரப்படுவேனோ! பிதாவுக்குப் பழிசுமத்தப் பிள்ளையாகப் பிறந்ததைக் குறித்துத் துயரப்படுவேனோ! இக்கன்றின் இறப்பைக் கண்ட தாய்ப்பசு துக்கப்படுமென்பதை நினைத்துத் துயரப்படுவேனோ! நானொருவன் எதற்கென்று துயரப்படுவேன்! என்ன செய்வேன்! செய்யத் தக்கதான்றும் இன்ன தென்று அறியேனே! ஆயினும் 'முற்ற நனைந்தார்க்கு ஈரமில்லை' என்பதுபோல முழுதும் பழிப்பட்ட எனக்கு இனி யென்ன துக்கமிருக்கின்றது! இனிப் பெரியயோர்சொல் கடக்கப்படாது என்பதுபற்றி உமது சொற்படியே இதோ இரதத்தில் ஏறுகின்றேன்! என்னை எப்படிப் புனிதனாக்க வேண்டுமோ அப்படிச் செய்து கடைத்தேற்றுவது உங்களுக்கே கடன்" என்று சொல்லி, ஏறி, இரதத்தை வந்த வழியே திருப்பிவிட்டுப் பிராயச்சித்தம் அறிந்து செய்விக்கத்தக்க பெரியோர்களிடத்துக்கப் போயினான்.
இந்தப் பிரகாரம் இராஜகுமாரன் போனபின்பு, இறந்துவிட்ட அக்கன்றை ஈன்ற தலையீற்றுப் பசுவானது தன் கன்று துள்ளிக் குதித்தோடிய வழியேபோய் அந்தக் கன்று கீழேவிழுந்து கிடப்பதைத் து‘ரத்தே கண்டவளவில் குலைகுலைந்து நடுநடுங்கி புத்திமயங்கி ஒன்றுந் தெரியாமல் சூறைக்காற்றில் அகப்பட்ட துரும்பைப்போல் சுழன்று சுழன்று ஓடிச் சமீபத்தில் வந்து உடல் சிதைந்தும் குடல் சரிந்தும் உயிர்விட்டுக் கிடப்பதைப் பார்த்துச் சோர்ந்துவிழுந்து பிரக்கினை தப்பிப் பிணம்போற் கிடந்து, பின்பு சற்றே தெளிந்தெழுந்து பெருமூச்சுவிட்டு அந்தக் கன்றைச் சுற்றிச் சுற்றிக் கோவென்று அலறியலறி அதனுடம்பை முகர்ந்து முகர்ந்து, "இதென்ன தீவினையோ; இதென்ன இந்திரசாலமோ! இதென்ன விபரீதமோ! வாலசைத்துக் கால்விசைத்து எனக்குமுன் துள்ளியோட இப்போது பார்த்தேனே! இத்தனை விரைவில் இப்படிப்பட்ட இடியிடிக்கும் என்று எள்ளளவும் அறியேனே! காவிரி முதலான தீர்த்த யாத்திலை செய்தும், சிதம்பரம் முதலான ஸ்தலயாத்திரை செய்தும், திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல் முதலானவைகளை வாயினாற் களைந்து திருப்பணி செய்தும், புல் மேயாமலும் நீர் குடியாமலும் நெடுநாள் விரதங்காத்தும் உன்னைப் பெறப்பட்ட பாடு தெய்வம் அறியுமே! அவ்வளவு பாட்டையும் அவலமாக்கிப் போட்டு, சேங்கன்றே! என்னைத் தெருவில் விட்டாயே! உன்னைப் பெறுகிறதற்கு நோற்ற நோன்புகளால் வந்த இளைப்பு இன்னும் ஆறவில்லையே! இதற்குள் இப்படிப்பட்ட ஆறாத பெரு நெருப்பை அடிவயிற்றில் வைத்தாயே! இந்தத் துக்கத்தை இனி எந்த விதத்தினாற் சகித்துக்கொள்ளுவேன்! 'பாவிக்கப் பாக்கியந் தக்காது' என்பதற்குச் சரியாகப் பளிங்கு போன்ற நிறமும், பால் வடிகின்ற முகமும், சிறுகித் திரண்ட திமிலும், கடைந்தெடுத்தது போன்று கால்களும் வாழைச் சுருள் போன்று வளர்ந்த வாலும், சித்திரக்கன்று போன்று சுபலக்ஷணங்களைப் பெற்ற வடிவுமுடைய நீ நிர்ப்பாக்கியமுள்ள எனக்குத் தக்காமற் போய்விட்டாயே! உன்னுடைய சுந்தரமுள்ள வடிவத்தைக் கண்டாற் காமதேனுவுங் கட்டி யணைத்து முகங்குளிர்ந்து முத்தங் கொள்ளுமே! நான் உன்னைப் பற்றியல்லவோ உயிர்தரித்து உலகத்தில் உலாவியிருந்தேன்! இன்னும் ஒருதரம் உன்னழகிய முகத்தைக்கண்டு என் மடிசுரந்து பால் சொரியக் காண்பேனோ! ஐயோ! உன்னை 'ஆயிரங் கன்றுகளிலும் அழகுள்ள கன்று' என்று கண்டோர் சொல்லக் களிப்புடன் கேட்ட என் காதுகளால் இன்று 'இளங்கன்றை இறக்க விட்டு மலட்டுப் பசுப்போல் வருந்துகின்றதே' என்று பலபேரும் பழித்துப் பேசுகின்ற வார்த்தையை எவ்வாறு கேட்பேன்? என்று எண்ணியெண்ணி இளைப்படைந்து மூர்ச்சித்து, மறுபடியுந் தெளிந்து இறந்து கிடக்கின்ற கன்றினுடம்பை உற்றுப் பார்த்த இரதத்தின் சக்கரம் ஏறுண்டு இரத்தஞ்சொரிய அழுந்திக் கிடக்கின்ற வடுவைக் கண்டு, "ஓகோ!! என் ஏழை மதியால் ஏதோ ஒரு சொற்பமான அபாயத்தால் விழுந் திறந்ததென்று எண்யி யிரங்கினேனே! இவ்வடுவைப் பார்க்கம்போது தேர்ச்சக்கரம் ஏறுண்டு உடல் சின்னப்பட்டு இறந்ததாகத் தெரியவருகின்றதே! ஆ! ஆ!! உனக்கு இப்படிப்பட்ட பெரிய அபாயம் வந்து சம்பவிக்கும்படி நானென்ன பாவஞ் செய்தேனோ! ஓ குழந்தாய்! நீ தேர்க்காலில் அகப்பட்டபோது எப்படிப் பயந்தாயோ! என்ன நினைந்தாயோ! எவ்வாறு பதைத்தாயோ! உயிர்போய் உடல் குழம்பிக் கிடக்கின்ற உன்னைப் பார்க்கப் பார்க்கப் பெற்ற வயிறு பற்றி யெரிகின்றதே!" என்று கண்¬ர் விட்டுக் கதறிக் கதறி அழுதழுது புரண்டு புரண்டு விம்மி விம்மி வெதும்பி வெதும்பிப் பெருமூச்சவிட்டு விழுந்து விழுந்து மெய்மறந்து கிடந்து, பின்பு எழுந்து "என் கன்றினைத் தேர்க்காலில் அழுத்திக் கொன்ற காருண்யமில்லாத கண்மூடியைக்கண்டால் என்னிரண்டு கொம்புக்கும் இரையாக்காது விடுவேனோ! மைந்தரைப் பெறாத மலட்டுத்தன முள்ளவர்களும் இப்படிச் செய்தத் துணிவு கொள்ளார்கள்! ஆ! இது செய்யத் துணிந்தவன் இன்னுமென்ன செய்யத் துணியான்!" என்று வெம்பியும் "துன்பஞ் செய்விக்கும் துஷ்டர்களுக்கும் கொலை செய்கின்ற கொடுந் தொழிலோர்க்கம் இடங்கொடாத இந்நகரம் இன்று வலியற்ற உயிர்களை மாய்த்து விடுகின்ற வஞ்சகர்க்கும் இடங்கொடுத்ததே! ஐயோ, இதில் அரசனில்லையோ! நீதியில்லையோ! நெறியில்€யோ! இதென்ன அநியாயமோ!" என்று முறையிட்டும், தன் கன்றையிழந்ததனால் உண்டாகிய துக்கத்தைச் சகிக்க மாட்டாததாய் வருந்தி, 'நமக்கு சென்று குறிப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளுவோம்' என்றெண்ணி அக்கன்றைப் பசுந்தழைகளால் மூடி, கண்¬ர் சொரிந்து கதறிக் கொண்டே மனுச்சக்கரவர்த்தியின் வாயிலில் வந்து, குடிகளுக்கக் குறைவு நேரிட்டால் அதை அரசனுக்கு அறிவிக்கும்படி அவ்வரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியைத் தன் கொம்பினால் மிகந்த விசையோடும், வலியோடும் அடித்தசைத்தது.
அப்படியசைத்தபோது அந்த நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம், "ஒரு காலத்திலுங் கேட்டறியாத ஆராய்ச்சிமணியினது ஓசையையின்று நு‘தனமாகக் கேட்டோம்; என்ன விபரீதமோ!" என்று ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ள, அந்த மணியிலிருந்து காதமட்டுங் கேட்கக் க¬ரென்று ஓசையுண்டானது. அவ்வோசையைச் சபா மண்டபத்தில் மந்திரி முதலானவர்கள் சூழச் சிங்காதனத்தின்மேல் வீற்றிருந்த மனுச்சக்கரவர்த்தியானவர் கேட்டு, மாதர்கள் காலிலணிந்த சிலம்போசை கேட்ட மாதவர்போலவும், அழுகுரலோசை கேட்ட அந்தணர் போலவும், சண்டையிரைச்சலைக் கேட்ட சற்சனர் போலவும், புலி முழக்கங்கேட்ட புல்வாய்போலவுந் திடுக்கிட்டு, திகைப்படைந்து சிங்காதனத்திலிருந்து பெருங்காற்றால் அடியற விழுந்த பனைமரம் போலக் கீழே விழுந்து மூர்ச்சை யடைந்து, சிறிது நேரஞ் சென்று தெளிந்தெழுந்து உடல் நடுங்கி உள்ளம் பதைத்து உயிர் சோர்ந்து நா உலர்ந்து கண்கலங்கி நடை தள்ளாடி அதிவேகமாக அரண்மனை வாசலுக்க வருமுன், வாயில் காப்பாளர் அரசனுக்கெதிரே அஞ்சி யஞ்சி வந்து அடியில் விழுந்தெழுந்து, "ஆண்டவரே! அரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியை ஒரு தலையீற்றுப் பசுவானது தன் கொம்பினால் அடித்து ஓசை யுண்டாக்கியது" என்று விண்ணப்பஞ்செய்ய, அதுகேட்டு விரைவில் வந்து, அவ்வாராய்ச்சிமணியின் அருகே உடல் மெலிந்து முகஞ்சோர்ந்து கண்¬ர் சொரிந்து கதறி நிற்கின்ற பசுவைக் கண்டு, சாவியாய்ப் போன தன் பயிரைக்கண்ட தரித்திரனைப்போல் மனம் நைந்து நைந்துருகி நொந்துநொந்து வருந்தி, "ஐயோ! சாதுவான இந்தப் பசுவுக்கு என்ன துன்பம் நேரிட்டதோ! இதன் குறையை இன்ன தென்று மதித் தறிந்துகொள்ள வல்லமை யில்லாதவனாக இருக்கின்றேனே!" என்று பதைத்துத் தம் அருகில் அச்சத்துடன் நிற்கின்ற அமைச்சர்களைப் பார்த்து 'எனக்குப் புகழும் புண்ணியமும் வரும்படி செய்விக்கின்ற உங்கள் மந்திரிச் செய்கை நன்றாக விருந்தது! உங்கள் அஜாக்கிரதையினால் அல்லவோ இந்தப் பசுவுக்கு ஏதோ வொரு குறை நேரிட்டது!" என்று கோபித்துப் பார்க்க, அது கண்டு அச்சங் கொண்ட மந்திரிகளுள் அப்பசு துயரப்படுவதற்குக் காரணம் இன்னதென்று முன்னே அறிந்தும் அரசனித்திற் சொல்வதற்க அஞ்சியிருந்த ஒரு மந்திரியானவன் 'இனி இதை நாம் மறைத்து வைத்தாலும் வேறொருவரால் வெளிப்படுமாதலால் நாமே அறிந்த மட்டில் அறிவிப்போம்' என்றெண்ணி அரசனை வணங்கித் "தலைவனே! உமது புத்திரன் இன்று ஏறிப்போன இரதத்தின் சக்கரத்தில் இளங்கன்று ஒன்று எதிரே குதித்து வந்து அகப்பட்டு இறந்துவிட்டது; அந்தக் கன்றை யீன்ற இந்தப் பசுவானது ஆற்றாந்துயர் கொண்டு ஆராய்ச்சிமணியை யசைத்தது! என்று சொன்னான்.
அச்சொல்லானது வெந்த புண்ணில் வேலுருவியதுபோல் மணியொலிகேட்டு வருந்தியிருந்த செவிகளினுள்ளே சென்றுருவிச் சுருக்கிட்டுவெதுப்பவிழுந்து, விஷந்தலைக்கேறினாற்போல வேதனையடைந்து, அஞ்சுபுலனும் அறிவுங் கலங்கிப் பஞ்சப் பிராணனும் பதைபதைத்தொடுங்க, பேச்சு மூச்சில்லாமற் சோர்ந்து கிடந்து, அருகிலிருந்த அமைச்சர்கள் செய்த சாந்தோபசாரத்தினால் சோர்வுநீங்கி அப்பசுவை யடிக்கடி பார்த்துப் பார்த்து, கண்¬ர் கடல்வெள்ளம் போல் பெருகவும் நெருப்பில் விட்ட நெய்யைப் போல் நெஞ்சம் உருகவும் "ஐயோ! இந்தப் பசுவுக்கு இப்படிப்பட்ட துக்க முண்டாவதற்கு நானே முக்கிய காரணமாக இருந்தேனே; தன் கன்றுக்கு அபாயமொன்று மில்லாதிருக்கினும் சுபாவத்திலே காணுந்தோறுங் கதறி யுருகுகின்ற அன்பையுடைய இந்தப் பசுவானது தன் கன்று இறந்து கிடக்கின்றதைக் கண்டபோது எப்படி யுருகியதோ! என்ன பாடுபட்டதோ! கன்று சமீபத்திலிராமல் சற்றே து‘ரத்திலிருக்கினும் பார்த்துப் பார்த்துப் பதைக்கின்றதும், 'அம்மா! அம்மா! என்று அலறுகின்றதுமாகிய சுபாவச் செய்கைகளையுடைய பசுவானது, கன்று இறந்து கண்மறைவிற் கிடக்கின்றதை எண்ணி எண்ணி எப்படிப் பதைக்கின்றதோ! ஐயோ! அடிக்கடி அலறுகின்றதே! புலி முதலான துஷ்ட மிருகங்களிலொன்று எதிரிடுமானால் முன்சென்று தன்னுயிரைக் கொடுத்தாயினுங் கன்றினுயிரைக் காக்க வேண்டு மென்னுங் கருத்துள்ள பசுவுக்கு, இறந்த கன்றை எதிர்கண்டபோது எப்படி உயிர் பதறியதோ! சிவசிவா! சிறுகன்று தேர்க்காலில் அகப்பட்டபோது எப்படித் துடித்ததோ என்று எண்ணுந் தோறும் என்னுள்ளம் பகீரென்று பதைக்கின்றதே! இந்தப் பசுவானது குள்ளனைக் கொண்டு ஆழம்பார்க்க வந்தது போலவும், பேயைத் தெய்வமென்று பிள்ளைவரங் கேட்க வந்தது போலவும், கொல்லையாள் காட்டியைக் கூலி கேட்க வந்தது போலவும், விழலினிடத்து நிழலுக்கு வந்தது போலவும், என்னைக் கொண்டு தன் துயரைத் தீர்த்துக்கொள்ள எண்ணியல்லவோ இவ்வாராய்ச்சிமணியை அசைத்து இவ்விடத்து நிற்கின்றது! இதற்க என்ன செய்வேன்!
"எமன் கையிலகப்பட்ட உயிர் எந்த விதத்தாலுந் திரும்பாதென்று உலகத்தார் சொல்லும் உறுதியான வார்த்தை வீண்போக, முன்னொரு காலத்தில் நமது நகரத்தில் ஓரந்தண னீன்ற சிறுவன் அகாலத்தில் மரணமடைய, அதுபற்றி அவ்வந்தணன் துயர்கொண்டு தமது சமூகத்தில் வந்து, "சிவநெறி திறம்பாமற் செங்கோல் செலுத்துகிற உமது காவலைக் கடந்து அகாலத்திலே அந்தகன் வந்து இரவும் பகலுந் தவஞ்செய்து யான் அருமையாகப் பெற்ற ஒரு பேறான புத்திரனை உயிர்கொண்டு போனானே தலைவனே! இது தகுமோ!" என்று முகமும் மனமுஞ் சோர்ந்து முறையிட்டுக் கொள்ள, அதுகேட்டு மனமுருகி நொந்து, சிவபெருமான் திருவடியன்றி மற்றொன்றிலும் மனம் வையாத தமது வல்லமையால் எமலோகத்தி லிருந்த உயிரை மீட்டுக் கொண்டு வந்து முன்னிருந்த உடலில் விட்டு, அவ்வந்தணனை மகிழ்ச்சி செய்வித்து, அன்றுதொட்டு எமனைத் தாமுள்ளவரையிலும் தமது நகரத்திலும் நாட்டிலும் வரவொட்டாமற் செய்த என் குலமுதல்வராகிய சைவச்சோழரைப்போல, அவ்வளவு பெரிதான காரியஞ் செய்யாவிட்டாலும், இப் பசுங்கன்றின் உயிரொன்றை மாத்திரமானாலும் மீட்டுக்கொடுக்க வலியற்றவனாக விருக்கின்றேனே! அவமிருத்து நேரிட்டபோது சஞ்சீவகரணி என்னுந் தெய்வத்தன்மையுள்ள மருந்தைக் கொடுத்துப் பிழைப்பிக்கச்செய்த என் குலத்தலைவர்களிற் சிலர்போல் அம்மருந்தையாயினும் பெற்றுக்கொள்ளத்தக்க தவஞ்செய்தேனோ! தமது அஜாக்கிரதையினால் பிற உயிர்க்குக் கெடுதி நேரிட்டபோது அது பொறாமல் தம்முயிரை விட்டுவிட்ட சில அரசர்களைப் போல என் அஜாக்கிரதையினால் நேரிட்ட இப் பசுங்கன்றின் முடிவைக் கேட்டறிந்த நான் உயிரையாயினும் விட்டேனோ! அன்னிய தேசத்தரசர் குற்றஞ் செய்தோலைக் கொலை செய்தாரென்று கேட்டாலும் 'குற்றம் வந்ததென்ன! கொலை செய்ததென்ன! என்று குலைநடுங்குகின்ற நல்லோர்கள் மரபில், நான் குற்றம் வரவும் கொலைசெய்யவும் அரசுசெலுத்தி, அந்த நல்லோர்கள் இயல்புக்கு நாணமுண்டாகத் தானோ வீட்டின் வாயிலில் வெள்ளெருக்குப் பூத்ததுபோலத் தோன்றினேன்!
"நாம் அரசாட்சிசெய்ய ஏற்பட்ட நாள்தொட்டு இந்நாள் வரையிலும் எவ்வுயிரும் எவ்விதத்திலும் யாதொரு குறையுமில்லாமல் வாழ்ந்து மகிழ்ந்திருக்க, நீதியுடன் முறை தவறாது செங்கோல் செலுத்தி வரும்படி சிவானுக்கிரகம் பெற்றோமே' என்பதுபற்றி ஒருநாழிகைக்கு முன் வரையிலும் உண்டாயிருந்த மனக்களிப்பையெல்லாம் மண்ணிற் கவிழ்த்தேனே! 'நாமும் பழிபாவங்களுக்கப் பயந்தே அறநெறி தவறாது அரசுசெலுத்தி வருகிறோம், பழைய தரித்திரனுக்குப் பணங்கிடைத்ததுபோல் நமக்கும் சிவானுக்கிரகத்தால் ஒரு சிறுவன் பிறந்தான், அவனும் கற்றவர் மகிழக் கல்வி கேள்விகளில் நிறைந்து பண்பும் பருவமும் உடையவனானான்; இனி நமக்கென்ன குறை' என்ற எண்ணி எண்ணி இறுமாப்படைந்தேனே! 'புத்திரப்பேறு பெற்றுப் புனிதனானோம்' என்று பூரித்திருந்தேனே! 'நமது புத்திரன் இளவரசுப் பட்டத்திற்கேற்றவனானான், இனிக்கல்யாணஞ் செய்விப்போம்' என்று கனவு கண்டிருந்தேனே! 'நமது புத்திரன் நற்குணங்களை யுடையவனாக விருக்கின்றான், பெற்றெடுத்த நமது பேர் கொண்டுவருவான்' என்று மனோராச்சியம் பண்ணி மகிழ்ந்திருந்தேனே! இளங்கன்று எதிர்வரவுங் கண்கெட்டுக் கருத்தழிந்தவன்போல் தேரை நடத்தித் தீராப்பழிபூண்டானே! ஐயோ! இவன் என் செங்கோலைப் பிடிக்கத்தக்க செல்வப்பிள்ளை யாகாமல் தென்னம்பிள்ளை யானானே!
"சிவதரிசனஞ் செய்யப் போகிறவன் தேரூர்ந்தே போகப்படாது; அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலக்கும்படி ஆள்விலக்கிகளைவிட்டு, முன்னே பரிக்காரர் வரவு குறித்துப் போகப் பின்னே மெல்லெனத் தேரை விடவேண்டும்; அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயமறியாது என்பதற்குச் சரியாகப் பரபரப்பாகத் தேரை நடத்திப் பசுங்கன்றைக் கொன்றான்! ஐயோ! இவன் கல்வியறிவுள்ளவனாக விருந்தும் அறிவழிந்து அரசன் பிள்ளையாகாமல் அணிற்பிள்ளை யானானே! கொடிய பாதகங்களிலெல்லாம் கொலைப் பாதகமே தலையென்று வேதமுதலாகிய கலைகளில் தானும் படித்தறிந்தான், சான்றோர் சொல்லவுங் கேட்டறிந்தான்; அப்படி யறிந்திருந்தும் அப்பாதகஞ் சேரவொட்டாமல் தன்னைக் காத்துக்கொண்டு பட்டப்பிள்ளை யாகாமல் பழிப்பிள்ளையானானே; ஐயோ! புதல்வனைப் பெற்றால் புண்ணியம் பெறலாம் என்றெண்ணிய எனக்கு மலடாயிருந்தாலும் வாழ்வுண்டென்று நினைக்கும்படி நேரிட்டதே! நான் நெடுநாளாகத் தியாகராஜப் பெருமானை வேண்டிக்கொண்டது இப்படிப்பட்ட பெரிய பழிக்காளாகிய பிள்ளையைப் பெறத்தானோ! பிள்ளையென்ன செய்யும்! பெருமான் என்ன செய்வான்! 'மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு' என்னும் பெரியோர் வார்த்தையின்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்க நேரிட்ட தென்று நினைத்து என்னை வெறுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், இந்தப் பிறப்பில் என் புத்தியறிந்து ஒரு தீங்குஞ் செய்ததில்லையே! இந்தப் பிறப்பில் இல்லாவிட்டாலும் முற்பிறப்பிலே
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
"ஐயோ! இந்தப் பசுவின் சோர்ந்த முகத்திற் கண்¬ர் ததும்புகின்றதைக் கண்ட என் கண்களை நுங்கு சூன்றெடுப்பதுபோலப் பிடுங்கி யெறியேனோ! 'இதன் கன்றை உன்புத்திரன் தேர்க்காலில் ஊர்ந்து கொன்றான்' என்று சொல்லக்கேட்ட என் செவிகளைச் செம்பு நீருருக்கிவிட்டுச் செவிடாக்கேனோ! இந்தப் பசு ஆராய்ச்சிமணியினால் தன் குறையை யறிவித்த நாழிகை தொட்டு இந்நாழிகை வரையிலும் அக்குறையைத் தீர்ப்பதற்கு வேண்டிய உறுதிமொழியைக் கூறாதிருக்கிற என் நாவைச் சூடுள்ள நெருப்பாற் சுட்டுவிடேனோ! இதற்குத் துன்பமுண்டாக்கினவன் இன்னானென்று அறிந்தும், அவனை இன்னும் தண்டனை செய்யாது தாழ்த்திருக்கின்ற என் கைகளைக் கத்தியைக் கொண்டு கண்டித்து விடேனோ! இதன் கன்றைப் பிழைப்பிப்பதற்குத் தக்க நன்முயற்சியைத் தேடி நாலுதிக்குகளிலும் நடவாத என் காலைக் கோடரிகொண்டு குறுக்கே வெட்டேனோ! இதன் மெலிவை யடிக்கடி கண்டும் வற்றியொடுங்காத மலபாண்டமாகிய என் உடம்பை வாளாயுதங்கொண்டு மடித்துக்கொள்ளேனோ! இதன் பரிதாபத்தையும் நமக்கு நேரிட்ட பழியையும் எண்ணி உருகியழியாத உள்ளத்தை வலிய விஷத்தையிட்டு மாய்த்து விடேனோ! நிலையிலா உயிர்க்கஞ்சி இவைகளில் ஒன்றுஞ் செய்யாது உயிர் வைத்திருக்கின்றேனே! என்ன செய்வேன்! பாவிக்கத் தீர்க்காயுள் என்பதற்குச் சரியாகப் பெரும் பாவியாகிய என்னுயிர் தனக்கத் தானேயும் போகின்றதில்லையே! "நல்ல பூஜாபலத்தினால் தெய்வபக்தியுடன் செங்கோல் செலுத்தி வருகின்றான் மனுச்சோழன்" என்று மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் புகழ்ந்த புகழெல்லாம் பொய்யாய்ப் போய்விட்டதே! நான் அப்புகழை வேண்டினவனல்ல; ஆதலால் அது போகட்டும்; உயிரினும் ஒன்பது பங்கு அதிகமாகத் தேடிவைத்த புண்ணியமும் போகின்றதே!
"ஆ! நான் நீதி தவறாது அரசு செய்கின்றேன் என்பதை நினைத்தால் எனக்கே ஏளனமாக விருக்கின்றதே! சேங்கன்றைத் தெருவிற் சிதைக்கவும் ஒருமித்த என் செங்கோலை அளவுகோலென்பேனோ! அஞ்சனக்கோ லென்பேனோ! எழுதுகோ லென்பேனோ! ஏற்றக்கோ லென்பேனோ! கத்தரிக்கோ லென்பேனோ! கன்னக்கோ லென்பேனோ! குருடன்கோ லென்பேனோ! கொடுங்கோ லென்பேனோ! துடைப்பங்ககோ லென்பேனோ! வைக்கோ லென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோ லென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்! இளங்கன்றைக் கொலை செய்யவுஞ் சம்மதித்திருந்த என் ஆக்கினா சக்கரத்தைக் கிரகச்சக்கர மென்பேனோ! வருஷ சக்கர மென்பேனோ! தண்டசக்கர மென்பேனோ! அல்லது இச்சேங்கன்றைச் சிதைத்த தேர்ச்சக்கர கன்றுக்கு அபாயம் நேரிடக் காத்திருந்த என் காவலைச் சிறு பெண் காக்கின்ற தினைக்காவ லென்பேனோ! குருடன் காக்கின்ற கொல்லைக் காவலென்பேனோ! புல்லாற் செய்த புருடன் காக்கின்ற புன்செய்க் காவலென்பேனோ! வரும்படி யில்லான் காக்கின்ற வாயிற்காவ லென்பேனோ! பயிரைக்காக்க வைத்த பண்ணைக்காவ லென்பேனோ! வேலை வேண்டிக் காக்கின்ற வெறுங்காவ லென்பேனோ! அல்லது இக்கன்றை அடக்கஞ் செய்யக் காத்திருக்கின்ற அரிச்சந்திரன்காவ லென்பேனோ! என்ன காவலென்று எண்ணுவேன்! என்ன செய்வேன்! ஐயோ! இப்படிப்பட்ட பாவியாகிய என்னை மனு வென்று பேரிட்டழைப்பது காராட்டை வெள்ளாடென்றும், அமங்கள வாரத்தை மங்களவாரமென்றும், நாகப்பாம்பை நல்லபாம்பென்றும் வழங்குகின்ற வழக்கம் போன்றதல்லது உண்மையல்லவே! இனி, இப்பசுங்கன்று உயிர்பெற் றெழுந்திருப்பதற்கு உபாயம் என் புத்திரனுயிரையன்றி யென்னுயிரையும் என் மனையாளுயிரையும் என்னரசாட்சியும், எனக்கு உரித்தாகிய எல்லாப் பொருள்களையுங் கொடுத்துவிட்டால் நேரிடுமென்று சொல்வோருண்டானால், இதோ கொடுத்துவிடுகிறேன். அவ்வாறு சொல்வோரு மில்லையே! இதற்கு நேரிட்ட துக்கமும் எனக்கிதனாலுண்டாகிய துயரமும் எப்படித் தீருமோ! இப்படி யென்றறியேனே! என்ன செய்வேன்!" என்று பலவிதமாகப் பரிதபீத்திருந்தார்.
இந்தப் பிரகாரம் பரிதபித்து வருந்துகின்ற மனுச்சக்கரவர்த்தியை அருகிலிருந்த அமைச்சர்கள் நோக்கிக் கைகுவித்துத்தொழுது நின்று, "ஓ மனுநீதி தவறாத மஹாராஜனே! விதி வசத்தாலே வலிய வந்து மடிந்த இளங் கன்றைக் குறித்து நீர் துன்பப்படுவது உயிர்களிடத்து உமக்குள்ள காருண்ணியத்துக்கு இயர்பேயென்று எண்ணி இதுவரையும் எதிரொன்றுஞ் சொல்லாது சும்மா இருந்தோம்; இனிக் காரியக் கெடுதியில் வாய்மூடிக் கொண்டிருப்பது மந்திரிகளுக்கு அழகல்லவென்றபடியால், நாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருளவேண்டும். உமது புத்திரன் சீவகாருண்ணியமே தேகமாகக் கொண்டவன். தான் பூமியதிராது எந்தச் செந்துக்கள் எதிர்வந்து அகப்பட்டுக் கொள்ளுமோவென்று கீழ்நோக்கி அஞ்சி யஞ்சி மெல்லென நடக்கின்றபோது, வேறோர் அதிர்ச்சியினால் நடுங்கிச் சிற்றெறும்புகள் விரைவாக ஊர்ந்து போகின்றதைப் பார்த்துத் திடுக்கிட்டு, 'ஓகோ என்ன பாவம்! இந்த உயிர்களுக்க நடுக்கம் உண்டாக நடந்தோமே' என்று எண்ணி முகஞ்சோர்ந்து பிரமைகொண்டு நிற்க நாங்கடள அனேக முறை பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட கிருபையுள்ளவன் இந்தக் கன்றை அசாக்கிரதையினால் கொன்றானென்று எண்ணுவதற்கு இடமில்லை. அன்றியும் அவருடன் சூழ்ந்து போன பிராமணர் முதலானோர்களுக்கும், தேரைக் சூழ்ந்துபோன எங்களுக்கும், தேர்க்குமுன் நடந்த ஜனங்களுக்கும், தெருவில் நின்று பார்த்திருந்த பிரஜைகளுக்கும் இலேசமுந் தெரியாதபடி அக்கன்று மாயமாகக் குதித்துவந்து மடிந்தது'; அன்றியும் தேர்க்கு முன்னே யானைவீரத் குதிரைவீரர் முதலானோர் அணியணியாக யூகம் வகுத்ததுபோல நெருங்கிப்போக, விருது பிடிப்போர், எச்சரிக்கை சொல்வோர்,கட்டியங் கூறுவோர், பட்டாங்கு படிப்போர், சோர்வு பார்ப்போர், ஆள்விலக்கவோர் முதலானவர்கள் நடக்க, இத்தனைபேரையுங் கடந்து, தேர்க்குஙச சமீபத்தில் சிங்கக்குட்டியாயிருந்தாலும் வரமாட்டாது; இதுவோ கோல்பிடித்தவனைக் கண்டால் கூப்பிடுது‘ரம் ஓடுகின்ற இயல்பையுடைய இளங்கன்று; இந்தக் கன்று அந்தக் காவலை யெல்லாங் கடந்து தேர்க்குச் சமீபத்தில் எதிரே துள்ளியோடி வந்ததென்றால், இந்திரசால மென்றுதான் எண்ணவேண்டுவதாக விருக்கின்றது! ஆதலால் அக்கன்றை அதன் விதியே இப்படிப்பட்ட ஆச்சரிய மரணஞ் செய்வித்ததன்றி உமது புத்திரன் செய்வித்ததல்ல, இந்தக் காரியம் இப்படியிருக்க, புத்திரன் கொன்றானென்று அவனை நோவதும் அவனைப் பெற்றதனாற் பழி வந்ததென்று உம்மை நீர் நோவதும், எய்தவன் இருக்க அம்மை நோவதுபோலவும் அம்பு செய்து கொடுத்த கருமானை நோவதுபோலவும் அல்லவோ இருக்கின்றது? நீர் சகல கலைகளையுங் கற்றுக் கேள்வியில் மிகுந்து, அரசர்களெல்லாம் புகழ்ந்து கொண்டாடத்தக்க தன்மையை யுடையவர்; உமக்கு இது விஷயத்தில் நாங்கள் விரித்துச் சொல்ல வேண்டுவதென்ன? இனித் துன்பப்படுவதை விட்டு, 'உயிர்க் கொலை தம்மை யறியாது நேரிட்டாலும் பிறர் செய்யக் கண்டாலும் அதற்குத்தக்க சாந்தி செய்துகொள்ள வேண்டும்' என்னம் விதிப்படி வினைவசத்தால் நேரிட்ட இந்தக் கன்றின் கொலைக்கு முன்னிலையாகவிருந்த உமது புத்திரனையும் பெரியோர்களைக் கொண்டு இதற்குத் தக்க பிராயச்சித்தத்தை யறிந்து செய்விக்க வேண்டுவதே உமக்க முறை" என்று சொன்னார்கள்.
அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் வியர்வு, துடிப்பு, நகை முதலான கோபக்குறிகள் தோன்ற மந்திரிகளைப் பார்த்து, "அமைச்சர்களே! உங்கள் நியாயம் நன்றாயிருந்தது; நீங்கள் சொல்லிய நீதி உங்களுக்கே ஒப்பாகுமல்லது தருமதேவதை சம்மதிக்குமோ! கன்றையிழந்து வருந்துகின்ற இப்பசுவின் சஞ்சலத்தையாவது சாந்தப்படுத்துமோ? இப்படி நீங்கள் சொல்லியது என் முகத்தைக் குறித்தோ? என் புத்திரன் உயிருக் கிரங்கியோ? அல்லது உங்கள் ஜ“வனத்தை எண்ணியோ? எது பற்றியோ? உலகத்தையாளும் அரசன் ஆசை பற்றியாவது வெகுளி பற்றியாவது தாட்சண்ணியம் பற்றியாவது உறவு பற்றியாவது நடுநிலையாக நியாயங்கண்டு சொல்லாமல் மாறபட்டால், அதை மறுத்து, 'இது விஷயத்தில் அரசன் நம்மைக் கொல்லுவானாயினுங் கொல்லட்டும், அவனுக்கு உறுதி கூறுவதே நமக்குக் கடன்' என்று நிச்சயித்துக்கொண்டு, நியாயங்கண்டு நடுநிலையாகச் சொல்வது மதியுடைய மந்திரிகளக்குத் தருமமாக விருக்க, நீங்கள் அதை நினையாமல் இப்படிச் சொல்லியது என்ன நினைத்தோ? சந்திரசூரியர் திசைமாறினாலும், சமுத்திரந் தடை மீறினாலும், மகாமேரு நிலைகுலைந்தாலும் மனங் கலங்காது விவகாரங்களிற் பழுதுவாராது பாதுகாக்கின்ற குணத்தையுடைய நீங்கள், இன்று நீதியில்லாத சில குறும்பரசனைக் கூடி, அவ்வரசர் து‘ளியென்றால் நிர்த்து‘ளியென்றும், கரும்பு கசப்பென்றால் எட்டிக்காய்போற் கசப்பென்றும், தாயைக் கொலைசெய்வது தக்கதென்றால் வேதத்தின் முதற்காண்டத்தில் விதித்திருக்கின்ற தென்றும், வெள்ளத்திற் கல் மிதக்கமோவென்றால் ஆற்றில் அம்மி மிதக்கக் கண்டோமென்றும்ட, காக்கை வெளுப்பென்றால் நேற்றைப்பொழுதில் நிற்கக் கண்டோமென்றும், கல்லின்மேல் நெல்லு முளைக்குமென்றால் கொத்தாலாயிரங் குலையாலாயிர மென்றும், கள்ளனைப் பிடிக்கலாமோ வென்றால் பிடித்தால் பெரும் பாவசமல்லவோ வென்றும், பொய் ஆயிரமட்டுஞ் சொல்லலாமோ வென்றால் ஐயாயிரமட்டுஞ் சொல்லலாமென்று விதியிருக்கிறதென்றும், பெண்சாதியுள்ளவனுக்குப் பிள்ளை கொடுப்பது ஆரென்றால் ஐயா! பெண் கொடுத்தவனே பிள்ளை கொடுக்க வேண்டுமென்றும், ஒருவன் மனையாள் மற்றொருவனைக் கூடலாமோ வென்றால் அடக்கத்தில் ஆயிரம் பேரோடு கூடினாலுங் குற்றமில்லை யென்றும், இந்தக்கழுவில் இவனை யேற்றலாமோ வென்றால் கழுவுக்குத்தக்க கனமில்லை யென்றும், என் பிள்ளையும் எச்சரிக்கைக்காரன் பிள்ளையும் ஒருவனை யொருவன் உதாசினமாகத் திட்டினாராம் இதற்கென்ன செய்யலா மென்றால் உமது சற்புத்திரன் வாய்க்குச் சர்க்கரையிட வேண்டும் மற்றவன் வாய்க்கு மண்ணிட வேண்டுமென்றும் சொல்லுகின்ற துர்மந்திரிகளைப் போல, நியாயம் பாராது, நயிச்சிய வார்த்தைகளைச் சொன்னீர்கள்; இது காலவேற்றுமையென்றே யெண்ணுகிறேன்.
"தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேட வேண்டுமென்னும் பெரியோர் வார்த்தையைப் பிடிப்பது சற்குணமுடையோர்க்குத் தகுதியென்றும், தாய் தந்தை யிடத்திலாயினுந் தராசுக்கோல்போலச் செப்பமாக நின்று தீர்ப்புக்கொடுக்க வேண்டுவது அரசர்க்கு அவசியம் வேண்டிய சற்கருமமென்றும் எனக்கு அடிக்கடி அறிக்கையிட்ட நீங்கள், இன்று, அதோகதியில் தள்ளிவிடத்தக்க அநியாயத் தீர்ப்பை யங்கீகரிக்கப் போதிக்கின்றீர்கள். இது உங்களிடத்து நேரிட்ட அவஸ்தை வச மென்றே யெண்ணுகிறேன். ஒருவரிடத்துத் தண்டனை விதிக்கும்போது எவ்வுயிர்களும் தன்னுயிர்போல் எண்ணுவதும், எந்தப்பொருள் எந்தப்பிரகாரமாயிருந்தாலும் அந்தப் பொருளினுண்மையை யறிந்து கொள்வதும், உருவுநோக்காது அறிவை நோக்குவதும், ஊழ்வினை நோக்காது செய்வினை நோக்குவதுமாகிய இப்படிப்பட்ட இலக்கணங்களுக்குப் பொருந்த விதிக்க வேண்டுமென்று எனக்கு அறிவித்துவந்த நீங்கள், இன்று என் புத்திரன் இரக்கமுள்ளவனென்றும், அதவன் அசாக்கிரதையினால் கொன்றதல்லவென்றும், பழவினையாற் பசுங்கன்று மடிந்ததென்றும், அதனால் அதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விக்க வேண்டுமென்றும், வாதியை மாத்திரம் வரவழைத்துக் கொண்டு நடுக் கொள்ளைக்காரன் நியாயந் தீர்த்தா னென்பது போற் சொல்லி நின்றீர்கள். ஓஹோ! அமைச்சர்களே! உங்களை, 'அந்நாளிருந்த அமைச்சர்களல்ல, இந்நாளில் என்னைக்கெடுக்க நினைத்துக்கொண்டு எங்கே யிருந்து வந்தவர்களோ!' என்று எண்ணுகின்றேன். ஐயோ! எனக்கு இப்படிப்பட்ட அநியாயத்தைக் கற்பித்தோ இம்மை மறுமை யின்பங்களை வருவிப்பீர்கள்! என்றும் மீளாத சிவகதியை யடையத் தக்க உறுதி வார்த்தைகளைப் பேசிய நீங்கள், இன்று, என்றும் மீளாத அவகதியை யடையத்தக்க இழிவுள்ள வார்த்தைகளைப் பேச எங்கே கற்றுக்கொண்டீர்களோ! ஆ! ஆ!! இந்த ஓரவஞ்சனையை உற்று நினைக்குந்தோறும் நெஞ்சந் திடுக்கிடுகின்றதே! உங்கள் சொற்படி இது காரியத்தில் உடன்பட்டேனானால் தருமமும் தவமும் சலிப்படையுமே! இக்காலத்தில் எனக்கு மேற்பட்டவர்களில்லை யென்று வழக்கழிவு செய்து வஞ்சித்துப் பேசுவேனானால், காலம் போகும் வார்த்தை நிற்குமே! மனுநு‘லில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்து‘ரம் நீண்ட பெயரைச் சுமந்தநான் இதற்குச் சம்மதித்தேனானால், எழுத்தறியாதவன் ஏட்டைச் சுமந்தது போலவும், கண்ணில்லாதவன் கண்ணாடியைச் சுமந்தது போலவும், வாசனையறியாதவன் மலரைச் சுமந்ததுபோலவும் வீணாகவே இந்தப் பெயரை எடுத்துக்கொண்டானென்று ஏழுலகத்தாரும் இகழ்ந்து பேசுவார்களே! இன்றைக்கு என் புத்திரன் செய்த இந்தக் கொடுங் கொலையாகிய பாதகத்துக்குப் பரிகாரஞ் செய்து, இலேசாக விட்டு, நாளைக்கு மற்றொருவன் இதைப் பார்க்கினுஞ் சிறிய கொலை யொன்று செய்யக் கண்டு, அவனைக் கொலை செய்விப்பேனானால், 'தருமமறியாத இவ்வரசன் தனக் கொன்று பிறர்க்கொன்று செய்கின்றான் என்று பார்த்தவர்களெல்லாம் பழித்துப் பேசுவார்களே; அல்லது 'தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாது விடாது' என்பது போல என்புத்திரன் செய்த கொலை யென்று ஆசையால் அடக்கிக் கொள்வேனானால், அது பற்றி வரும் பழிபாவங்கள் என்னை யடையாமலிருக்குமோ? ஆதலால், இப் பசுவானது அருமையான இளங்கன்றை இழந்து வருந்துகின்றதைத் தவிர்க்க வழியில்லாதவனாகிய நானும், இந்தப் பசுவைப்போல நெடுநாளாக வருந்தி அருமையாகப் பெற்ற என் புத்திரனைப் பழிக்குப் பழியாகக் கொன்று வருத்தங் கொள்வதே தகுதி" என்று சொல்லினார்.
அதுகேட்டு மனங்கலங்கிய மந்திரிகளுக்குள் ஒரு மந்திரியானவர் அரசனை வணங்கித் "தருமநெறி தவறாத தலைவனே! சாவதானமாகத் தயவுசெய்து என் வார்த்தையைக் கேட்டருள வேண்டும். ஆன்மாக்களுக்கு அறிவின் உயர்வு தாழ்வு பற்றியே புண்ணிய பாவங்களும் ஏறிக் குறைந்திருக்கும் என்னுஞ் சுருதி வாக்கியத்தின்படி தர்மார்த்த காம மோக்ஷங்களைப் பெறுதற்கு யோக்கியமான அறிவுள்ள மனிதப் பிறவியெடுத்த ஜ“வர்களுக்கள் ஆனை மதப்பட்டு அடவி அழித்தது என்னும் நியாயம்போல மதத்தினால் காமக்குரோத முதலானவைபற்றி ஒருவரை யொருவர் கொலை செய்தாரானால் அக்கொலைக்கு ஈடாக கொன்றவரைக் கொலை செய்விக்கக் கடவரென்றும், அப்படி யன்றிக் காக்கை யேறிப் பனம்பழம் விழுந்தது என்னும் நியாயம்போல் வலிமை பகைமை முதலானவை யில்லாமல் விதிவசத்தால் ஒருவர் இறந்ததற்கு வியாஜமாக முன்னிட்டவர்களை அவ்வாறு இனி முன்னிடவொட்டாமலிருக்கத் தண்டித்து முன்னிட்டதனால் வந்த பாவத்துக்கப் பரிகாரஞ் செய்விக்கக் கடவரென்றும், அப்படியன்றி அமுதம் ஊட்டுகின்றபோது அதுவே விஷமாகிக் கொன்றதென்னும் நியாயம்போல் நல்ல வழியில் நிறுத்தும் பொருட்டு அச்சமுறுத்தித் தண்டிக்கும்போது அபாயம் நேரிட்டு இறந்ததற்கு வேறு காரணமாகியிருந்த தந்தை குரு அதிகாரி முதலானோர்களை அநசன முதலான அரிய விரதங்கள் தவங்கள் செய்விக்கக் கடவரென்றும், மிருகம் பட்சி முதலான மற்ற உயிர்களுக்கு மனிதர்களால் கொலைநேரிட்டால் அந்தந்த உயிர்களின் தரத்துக்கும்ட அவரவர் குணாகுணங்களுக்குஞ் செய்கைகளுக்குங் காரணங்களுக்குந் தக்கபடி யறிந்து பிராயச்சித்தஞ் செய்விக்கக் கடவரென்றும், பொதுவாக அறநு‘ல்களில் விதித்திருக்கப்பட்ட விதியை இன்று கன்றின் கொலைபற்றி நீர் செய்விக்க எண்ணிய அபூர்வமான விதி விலக்குகின்றதே; இது தகுதியைக் கடக்கின்ற குற்றமென்று சொல்வதற்கு இடமுண்டுபண்ணுமே" என்றார்.
அதுகேட்ட அரசன் "மந்திரியே" நீர் பயனைத் தரும் விருக்ஷத்திலுள்ள பழத்தைப் பாராது பிஞ்சைப் பிடித்ததுபோல் பிடித்தீர். நன்றாயிருந்தது உமது வார்த்தை! அறிவின் உயர்வு தாழ்வுகளைப் பற்றிப் புண்ணிய பாவங்கள் ஏறிக் குறையுமென்றுபூர்வபாகத்திற் சொல்லிய சுருதி, உத்தரபாகத்தில் பரமேசுவரன் ஆன்மாக்கள் தோறும் விகற்பமில்லாமல் நிறைந்திருக்கின்றபடியால், மாயையின் காரியமாகி வேறுபட்ட அறிவை நோக்காமல், அப்பரமேசுவரனை நோக்கி எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி நடக்க வேண்டும் என்ற உத்தரபாகத்தின்படி, பிறப்பு, குணம், சாதி, தொழில் முதலான விகற்பங்களை நாடாது உயிர்க் கொலையினிடத்துச் சமானமாகத் தண்டிப்பதே தகுதி; என் புத்திரன் தேரிலேறிக் கொண்டு செல்வச் செருக்கினால் மறதி பற்றியே இப் பசுவின் கன்றைக் கொன்றான், ஆதலால் இவன் காக்கை ஏறிப் பனம்பழம் விழுந்தது போல வியாஜமானவனுமல்லன், அமுதமூட்விஷமானதுபோல் நன்மை செய்விக்கப்போய்க் கொலைக்குக் காரணமானவனுமல்லன், ஆனை மதப்பட்டு அடவி யழித்தது என்று நீர் சொல்லிய நியாயத்துக்குச் சரியாக விருக்கின்றான், ஆதலால் இவனைக் கொல்வதே முடிவு" என்று சொன்னார்.
அதுகேட்டு மற்றொரு மந்திரியானவர் அரசனைத் தொழுது "மகாராஜனே! சுருதியில் எல்லா உயிர்களையும் உயர்வு தாழ்வு நோக்காது சமனாக நோக்கவேண்டுமென்று உத்தரபாகத்தில் விதித்திருக்கின்றது அந்தணரொழுக்கத்துக் கன்றி அரசரொழுக்கத்துக்குப் பொருந்தாதே; அது பொருந்துமானால், பிராமணர் முதலான குலாசாரமும் பிரமசாரி முதலான ஆசிரம ஆசாரமும் பெரியோர் சிறியோர் நல்லவர் தீயவர் என்கிற கிரமப்பாடுகளம் வேறுபட்டு உலகநிலை தவறி அரசாட்சி மழுங்கிவிடுமே, இது ஒழுக்கத்தைக் கடக்கின்ற குற்றமென்று சொல்வதற்கு இடங் கொடுக்குமே, ஆதலால் பூர்வபாகத்தில் விதித்த விதிப்படி அறநு‘ல்களிற் குறித்த நியாயங்களைக் கொண்டு தீர்ப்பிடுவதே நெறியாகும்" என்று சொன்னார்.
அதுகேட்டு மனுச்சோழர் நகைத்து "அமைச்சரே! நீர் வழிக்குத் துணையாக வருவான்போல் வந்து நடுக்காட்டிற் பயங்காட்டிப் பணம் பறிக்கின்றவன் போலப் பயம் காட்டுகின்றீர். பரமேசுவரன் அவ்வவ்வுயிர்களிடத்திலும் வேறுபடாமல் விளங்குகின்றபடியால் எவ்வுயிர்களையும் பொதுவாக நோக்கவேண்டும் என்ற உத்தரபாகத்தின் விதியை நான் அனுசரித்துக்கொண்டது உயிர்க்கொலையாகிய பாவநிவர்த்திக்கு மாத்திரமே யல்லது மற்றெதன்றிலுமல்ல. இக் கருத்தை அறிந்து கொள்ளாமல் 'கருத்தறியாதவன் சொன்னமே கொள்வான்' என்பதுபோலக் கொண்டு ஒழுக்கங்கடந்த குற்றம் வருமென்று கூறினீர். ஆனால் மற்றவை யெல்லாம் நிற்க, கொலைப்பாதக நிவர்த்திக்கு மாத்திரம் எவ்வுயிர்களையுஞ் சமமாகக் கொள்ளவேண்டுமென்பது எவ்வகையாலென்பீரேல்: உயிர்களெல்லாஞ் சிற்சத்தியினுருவமாகலானும் எல்லா உயிர்களுக்கும் இறைவனே தனுகரணங்களைக் கொடுத்தலானும், அவனது சிற்சத்தியாகிய உயிர்களை அவன் கொடுத்தருளிய உடம்பினின்றும் நீக்குதல் நினைக்கப்படாத அபராதமாகவானும், எந்தெந்த உயிர்களும் இயல்பினால் அல்லாமல் இம்சையினால் உடம்பை விட்டுப் பிரியும்படி நேரிட்டால் அந்தந்த உயிர்களுக்கும் அவ்வவ் வுடம்பை விட்டு நீங்கும்போதுண்டாகும் வருத்தம் பெரிதாக இருக்கமாகலானும், அன்றியும் கொலை செய்யுமிடத்து, கரும்பையும் எள்ளையும் ஆலையிலுஞ் செக்கிலும் வைத்தாட்டும்போது நெருக்கிலகப்பட்டு அரைபட்டு நசுக்குண்டு சின்னாபின்னப்பட்டு அக்கரும்பிலும் எள்ளிலுமிருந்து ரசமும் நெய்யும் எப்படிக் கலங்கி வருமோ அப்படியே, உடல் நசுக்குண்டு அரைபட்டுச் சின்னமாக அதிலிருந்து நடுநடுங்கி அறிவுகெட்டுத் திகைப்படைந்து கலங்கி வருவது எவ்வுயிர்களுக்கும் பொதுவாகலானும், தமக்குக் கொலை நேரிடுவதை அறிந்தபோது உடம்பு நடுங்கியும், பதைத்தும், வியர்த்தும் தடதடத்துந் தள்ளாடியும், கால்சோர்ந்தும், கண்கலங்கியும், இருளடைந்தும், காதுகள் கும்மென்று அடைபட்டும், நாசி துவண்டும், வாய்நீருலர்ந்தும், நாக்குழறியும், வயிறு பகீரென்று திகிலடைந்தும், மனம் திகைத்துப் பறை யடித்தாற்போற் பதபதவென்று அடித்துத் துடித்துத் துக்கமுஞ் சோர்வுங் கொண்டு மயங்கவும், பாய்மரச் சுற்றி லகப்பட்ட காக்கை போலவும், நீர்ச்சுழியி லகப்பட்ட வண்டு போலவும், சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும், உயிர் சுழன்று சுழன்று அலையவும் உண்டாகின்ற பயங்கரம் எவ்வுயிர்களுக்கும் இயல்பாகலானும், இறந்தவுடன் அவ்வுயிர்கள் இழப்பினாற்பட்ட இம்சையுமன்றி உடனே பிறப்பினாலும் வருத்தமடைந்து துக்கப்பட வேண்டுமாகலானும், நாம் வேண்டி ஓருயிரைப் பிறப்பிப்பதற்குடச சுதந்தரமில்லாதபடியால் நாம் வேண்டி ஓருயிரை இறப்பிப்பதற்கும் சுதந்திரமில்லை; இறப்பிப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் இறைவனே சுதந்தரமுள்ளவனென் றெண்ணாமல் ஆகாமியத்தால் கொலை செய்வதனால் மீளாநரகம் நேரும் என்றறிந்து கொள்வீர்; ஆதலால் எவ்வுயிர்களிடத்துங் கொலைப்பாதகத்தைச் சமமாகக் கொள்ளவேண்டும். இந்த நியாயத்தின்படி என்புதல்வனைப் பழிக்குப் பழியாகக் கொன்று விடுவதே முடிவு" என்று சொன்னார்.
அதுகேட்டு வேறொரு மந்திரியானவர் மனுச்சோழரை வணங்கி "அரசனே! உமது பெயரினால் விளங்கும் மனுநு‘லிற் குடுமியையும் முகரோமத்தையும் க்ஷவரஞ் செய்து, தான் கொன்ற பசுத்தோலைப் போர்த்துப் பசுமந்தையினிடத்தில் வாசஞ் செய்து, கோசலத்தினால் ஸ்நானம் பண்ணி, இந்திரியங்களை அடக்கியிருத்தல், கஞ்சிகுடித்தல், அவிசுபண்ணியுண்டல், பட்டினியிருத்தல், பசுமந்தையினுடன் போதல், பசுக்களுக்கு உபசாரஞ் செய்தல், பசுதானஞ் செய்தல் முதலான செய்கைகளைப் பசுக்கொலை செய்தோர்க்குப் பிராயச்சித்தமாகச் செய்விக்க வேண்டு மென்று விதித்திருக்கின்றதே; அதற்கு மாறாகப் புதல்வனைக் கொலை செய்வீரானால் விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்றதே" என்று சொன்னார்.
அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் "மந்திரி! நீர் சொன்னது பால்வேண்டி யழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்குக் காட்டுவது போலிருக்கின்றது, விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்ற தென்று சொன்னீர். அந்த மனுநு‘ல் அநித்தயமாகிய தேகத்தில் அபிமானமும் அசுத்தமாகிய பிரபஞ்சபோகத்தில் ஆசையும் வைத்த கர்மிகளுக்கே அவ்விதி கூறிய தல்லது, நித்தியமாகிய சிவத்தில் அபிமானமும் சுத்தமாகிய சிவபோகத்தி லாசையும் வைத்த என்பிதா மூதாதை முதலானவர்களுக்குக் கூறியதல்ல. உயிர்க்கொலை நேரிட்டால் உயிர்விடக் கடவரென்றே குறிப்பினாற் கூறியிருக்கின்றது. என் பிதா மூதாதைக்கு எவ்விதியோ அவ்விதியே எனக்கும் என் புத்திரனுக்கும் வேண்டத்தக்கது. ஆதலால் விதிமாறாட்ட மாகாது. இந்த நியாயத்தால் என் புத்திரனை யிழந்து விடுவதே முடிவு" என்று சொன்னார்.
அதுகேட்ட மற்றொரு மந்திரியானவர் மகாராஜனை வணங்கி "உலகந் தோன்றியது முதல் இது பரியந்தம் தெய்வ கடாக்ஷத்தினாலும் வல்லமையினாலும் நீதியுடன் உலகாண்ட அரசர்கள் தாங்கள் ஆளுங்காலங்களிற் பசுமுதலான மிருகவர்க்கங்களுள் ஒவ்வொன்றை அகங்காரத்தால் அடித்துக் கொன்ற அந்நியமானவர்களையும் பிராயச்சித்தஞ் செய்வித்தார்களே யல்லது, கொலை செய்வித்தவர்கள் உண்டென்று கேட்டதில்லை. அப்படியிருக்க, உமது புத்திரன் இந்தப் பசுவின் கன்றைக் கொல்லவேண்டுமென்று கறுவுகொண்டு கொன்றவனல்லன். நீரெப்படி அவனைக் கொலைசெய்யும்படி தீர்ப்பிடலாம்? அவ்வாறு தீர்ப்பிட்டால் முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்ற முண்டாகுமே?" என்றார். அதுகேட்டு மனுச்சோழரானவர் "மந்திரி! நீர் மரபறியாதவன் மணம் பேச வந்ததுபோற் பேசவந்தீர். முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்றம் வருமே யென்றீர். ஆனால் நான் சொல்வதை நன்றாகக் கேளும். பூர்வம் என் முன்னோர்கள் ஆளுங் காலங்களில் இப்படிப்பட்ட கொலை நேர்ந்ததேயில்லை. ஏகதேசங்களில் ஒவ்வொரு கொலைப்பாதகம் நேரிட்டபோது தம்முயிரையுங் கொடுத்துப் பழிக்கு ஈடுகட்டி யிருக்கின்றார்கள். அவர்கள் நிற்க, மற்ற அரசர்களோ வென்றால் தாங்கள் ஆளுங் காலங்களில் தேசாசார முதலான கற்பனைகளைப்பற்றி நு‘தன நு‘தனமாக நியாயங்களை யேற்படுத்திக்கொண்டு அவைகளின்படி நடத்தினார்கள். அவ்வரசர்கள் என்னொடு சேர்க்கப்பட்டவர்களல்லர். ஆதலால் என் தீர்ப்பின்படி நடத்துவதே துணிவு" என்றார்.
அதுகேட்டு மற்ற மந்திரிகளெல்லாம் சேர்ந்து வணங்கி நின்று, "மஹாராஜனே! கூறியதே கூறுகின்றார்களென்று கோபஞ் செய்யாமல் யாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருள்வீராக; இந்தப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்துள் ஒன்று; இது பெற்ற கற்றோ பால் கொடுத்தற்குரிய பசுவாகத்தக்கதன்று. ஏருழுதற்குரிய எருதாகத்தக்க சேங்கன்று; உமது புத்திரனோ ஆறறிவுள்ள ஆண்மக்களிற் சிறந்த நல்லறிவுடையவன்; அவனோ அக்கன்றைக் கொல்ல வேண்டுமென்று கொன்றவனல்லன்; இக்கொலையோ கன்றினுடைய ஊழ்வினையென்று உலகமெல்லாஞ் சொல்லும்; ஆதலால் இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதேமுறை" என்று சொன்னார்கள்.
அதுகேட்டு அரசன் "மந்திரிகளே! நீங்கள் உண்மையைக் கண்டறிந்து சொல்வதற்குச் சக்தியற்றவர்கள்போல் இலேசாகக் சொல்லுகின்றீர்கள்; நல்லது, நான் சொல்லுகின்றதைக் கேளுங்கள். 'இப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்தி லொன்று' என்று சொன்னீர்கள். நன்றாயிருக்கின்றது உங்கள் நியாயம்! உயர்வு தாழ்வுகளை உயிர்களின் அறிவினிடத்து வைத்துத் தாழ்ந்த அறிவுள்ள மிருகங்களைக் கொன்றால் பிராயச்சித்த மென்றும் உயர்ந்த அறிவுள்ள மனிதர்களைக் கொன்றால் கொலை செய்வதென்றும் சொல்லுகின்ற உங்கள் வார்த்தையின்படியே, இப்பசு மனிதரறிவைப் பார்க்கினுஙட உயர்ந்த அறிவுள்ளதாகவிருக்கின்றது. எவ்வாறெனில், எந்த உலகத்தில் எந்தக் காலத்தில் எந்தப்பசு இந்தப் பசுவைப்போலக் கன்று இறந்ததைக் குறித்து ஆற்றப்படாத துக்கத்தோடும், அதிகாரிகளாலும் பகைவராலும் அயலாராலும் மற்ற உயிர்களாலும் ஒருவர்க்கக் கறை நேரிட்டால் அக்குறையை அரசன் தனக்கத் தெரிவிப்பதற்கு அரண்மனைவாயிலில் ஆராய்ச்சிமணி கட்டுவித்திருக்கிறானென்று சாதாரண மனிதர்களாலும் அறியப்படாத இந்தக் காரியத்தை அறிந்து வந்து அந்த மணியைக் கொம்பினா லடித்துச் சத்தமெழுப்பிக் கதறிக் கண்¬ர் வடித்துக்கொண்டு நின்றது? இதனை யெப்போதாவது கேட்டிருக்கின்றீர்களோ? இல்லையே, இந்தப் பசு மாத்திரம் அப்படி அறிந்து செய்ததை யின்று பார்த்து நின்றீர்கள், ஆதலால் இது முன் தவக்குறையால் பசுவுடம்பெடுத்த தாயினும், மனிதப் பிறப்பில் உயர் குலத்தில் மேலான அறிவோடு பிறந்திருக்கின்றாதாகவே கொள்ள வேண்டும். அன்றியும் பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வுள்ளதென்றும் அதன் கொம்பினடியில் பிரம விஷ்ணுக்கள் இருக்கின்றார்க ளென்றும், காவிரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் அந்தக் கொம்பி னுனியில் இருக்கின்றன வென்றும், சிவபெருமான் சிரசிலும் சிவசக்தி நெற்றியிலும் இருக்கின்றார்களென்றும், சுப்பிரமண்யக் கடவுள் நாசியிலும், அசுவினிதேவர் காதுகளிலும், சந்திரசூரியர் கண்களிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி குரலிலும், கந்தருவர் மார்பிலும், இந்திரன் கழுத்திலும், உருத்திரர் முதுகிலும், சத்தமாதர்கள்குறியிலும், இலக்குமி குதத்திலும், கங்கை மூத்திரத்திலும், பூமிதேவி வயிற்றிலும், யமுனை சாணத்திலும், திருப்பாற்கடல் முலையிலும், யாகாக்கினி வயிறு முகம் இதயம் என்னும் உறுப்புக்களிலும், அருந்ததி முதலான கற்புள்ளவர்கள் உடம்பிலும் இருப்பார்களென்றும் சொல்லியிருக்கின்றதே. அன்றியும் பரமசிவன் திருமுடிக்க அபிஷேகஞ் செய்ய யோக்கியமான பால் முதலான திரவியங்களைக் கொடுக்கின்றதே. அன்றியும் திருவெண்¬ற்றின் காரணமான திரவியம் பிறப்பதற்கும் இடமாக விருக்கின்றதே. அன்றியும் நான்கு வேதமும் கால்களாகவும், கருமமும் ஞானமும் கண்களாகவும், ஆகமங்களும் சாத்திரங்களும் கொம்புகளாகவும், தருமமே உடலாகவும், தவமே நடையாகவுங் கொண்டு பரமேசுவரனுக்கு வாகனமாக விளங்கிய தருமவிடபத்துக்கு இனமாகவும் இருக்கின்றதே. இப்படிப்பட்ட மேன்மையுள்ள பசுவை ஐயறிவுடைய மிருகவர்க்கத்துள் ஒன்றென்று சொல்லப்படுமோ?
"இதன் கன்றோ பால்கொடுத்தற்குரிய பசுவாவதில்லை, ஏருழுதற்குரிய எருதாகத் தக்க சேங்கன்று' என்று சொன்னீர்க தேவர்களெல்லாம் பிறப்பதற்குத் தவஞ் செய்கின்ற மகத்துவ முள்ள இந்தத் திருவாரூரிலே பிறந்த எல்லா உயிர்களும் சிவகணங்க ளென்கிற சித்தாந்தப்படி, இந்த க்ஷேத்திரத்திலே பிறந்த இக்கன்றைச் சிவகணமென்று கொள்வதை விட்டு, சேங்கன்றென்று சொல்லப்படுமோ? 'புத்திரனோ ஆறறிவுள்ள ஆண் மக்களிற் சிறந்த நல்லறிவுள்ளவன்' என்றீர்க சிவதரிசனஞ் செய்யத் தேரூர்ந்து போய்ச் செல்வ மறைப்பினாற் கண்மறைந்து கன்றைக் கொன்றவன் நல்லறிவுள்ளவனென்று சொல்லப் படுவனோ? கன்றிறந்ததை ஊழ்வினையென்று உலகஞ் சொல்லு மென்றீர்கள்; பிராரத்துவ வாதிகளுக்கல்லாமல், காமக் குரோதாதிகளாற் பாவங்களைச் செய்வதற்குச் சீவனே ஆகாமிய கர்த்தாவென்று கொள்ளுகிற உத்தமமார்க்கத்தை யுடையோர்க்கு ஊழ்வினை யென்று சொல்லத் தகுமோ? 'இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதே முறை' யென்றீர்கள்; மலையை யெடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்துச் சொஸ்தப் படுத்துவார்களோ? அதுபோலக் கொலைப்பாதகஞ் செய்தோர்க்குப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் பாவநிவர்த்தி செய்யப்படுமோ? அவ்வாறு செய்வேனானால் என்றும் மீளா நரகத்தில் என் புத்திரனை விழுத்துவதுமன்றி, யானும் விழுந்து வருந்துவேன்; இவ்வுலகத்தினும் மீளாத பழிக்கு ஆளாகச் சமைவேன்; அன்றியும் எண்ணிறந்த பெருமை பெற்ற இரவி குலத்திற்கம் என்னை யடுத்திருக்கின்ற உங்களுக்கும் ஓரிழுக்கு வார்த்தையும் உண்டாகும். ஆதலால், இனி என் சொல்லுக்கிரண்டில்லை; இந்தப் பசுவின் கன்றைக் கொன்ற பழிக்கு ஈடாக என் புத்திரனைக் கொலை செய்வதே நிச்சயமாகிய தீர்ப்பு" என்று சொல்லிவிட்டு, பின்பு மந்திரிகளுக்குள் கலாவல்லபன் என்கிற மந்திரியைப் பார்த்து "மந்திரி! என் புத்திரனை யழைத்துப்போய் அந்தக் கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கடத்தி, நீ தேரிலேறிக் கொண்டு அவனுடம்பின்மேற் தேர்ச்சக்கர மேறும்படி செய்து கொலை செய்து வருவாய்" என்று கட்டளையிட்டார். அப்போது மற்ற மந்திரிகளெல்லாம் கைநெரித்துக் கொண்டு கண்களிலே நீரரும்ப மனங்கலங்கிப் பிரமைகொண்டு நின்றார்கள்.
கலாவல்லப னென்கிற மந்திரியானவன், கடுந்தவம் புரிந்து பெற்ற கவுத்துவ மணியைக் கடலிலெறிந்து விட்டு வாவென்றும், பலநாள் வருந்தி வளர்த்த பஞ்சவர்ணக் கிளியைப் பருந்துக் கிரையிட்டு வாவென்றும், செய்தற்கரிய தவஞ் செய்து பெற்ற தேவாமுதத்தைச் சேற்றிற் கழித்த வாவென்றும் சொல்லக் கேட்டவன்போல் திடுக்கிட்டு உணர்வழிந்தும், திகைப்பூண்டு மிதித்தவன்போல் மயங்கி நின்றும், சற்று உணர்வுதோன்ற அது விஷயத்தில் மனமில்லாதவனா யிருந்தும் அரசன் ஆணையைத் தடுப்பதற்கு அஞ்சி வணங்கி விடைபெற்றுக் கொண்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டுத் தளர்ந்த நடையோடு முகங்கருகி நெடுமூச்ச விட்டுக்கொண்டு, "சிவசிவா! சம்போ! சம்போ! இந்தப் பாதகஞ் செய்யத்தானோ நான் மந்திரியாக ஏற்பட்டேன்! கொலையென்று சொல்லுகின்றோர்களைப் பார்த்தாலும் பயங் கொள்ளுகின்ற எனக்கத்தானோ இப்படிப்பட்ட விதி வரவேண்டும்! இந்தக் காரியத்தைச் செய்யாது விடுவோ மென்றால் அரசன் கட்டளையைக் கடந்தா னென்னுங் குற்றம் நேரிடுமென்றும், அல்லது செய்வோமென்றால் நமது உயிர்போற் சிறந்த வீதிவிடங்கன் விஷயத்தில் எப்படிக் கொலைசெய்யத் துணிவு உண்டாகுமென்று எண்ணி யெண்ணி என் மனம் இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்புபோல் திகைக்கின்றதே! இதற்கு என்ன செய்வேன்! என்ன செய்வேன்!" என்று வருந்தி வருந்தி ஒரு கால் முன் வைப்பதும் மற்றொரு கால் பின் வைப்பதுமாகி ஊசலாடுகின்றவனைப் போல் அலைந்தும், வேந்தன் விஷமுண்ணென்று கட்டனையிடினும் உண்ணவேண்டிய உரிமை நமக் கிருக்கிறபடியால் போய்த் தொலைப்போம் என்று சற்றே நடந்து, 'எண்ணுதற்கும் யோக்கியமல்லாத இப்பாதகத்தை யெப்படிச் செய்வோம்' என்று சற்றே நின்று நடைத்து‘க்கங் கொண்டவன்போல் தெளிந்தும் மயங்கியும், பித்தம் பிடித்தவன்போல் பிதற்றியும், கண்¬ர் சொரிந்து கலங்கினாவனாகிப் பின்பு தெளிந்து, அரசன் நமக்கும் தந்தையாதலால் வீதிவிடங்கன் செய்த குற்றத்தை நாமேற்றுக் கொண்டு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்' என்று துணிவுகொண்டு, அக்கன்று இறந்து கிடக்கிற வீதியினிடத்து அணைகடந்த வெள்ளம்போல் அதிவேகமாக வந்து நின்று, தன்னரையி லிருந்த உடைவாளை உறையிலிருந்துருவியெடுத்துக்கொண்டு, தனது கழுத்தில் வைத்து ஊட்டியை அரிந்துகொண்டு உயிரிழந்து விழுந்தான்.
அதுகண்டு சில ஒற்றர்கள் அதிசீக்கிரமாகப்போய் மனுச்சோழரிடத்தில் "ஆண்டவரே! தேவரீர்க்குக் கண்போல் விளங்கிய கலாவல்லபனென்னும் மந்திரியானவர் சேங்கன்றிறந்து கிடக்கின்ற தெருவிற்போய் அரையிலிருந்த உடைவாளைக் கொண்டு தமது கழுத்தை யரிந்துகொண் டிறந்துவிட்டார்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள்.
அதுகேட்ட அரசன் அளிந்த புண்ணில் அம்பு பட்டதுபோல் துடிதுடித்து மிகவும் மனங் கலங்கி "ஓஹோ இதென்ன பாவம்! இதென்ன பாவம்! ஐயோ! கலாவல்லபனென்கிற மந்திரியானவன் நானிட்ட ஏவலைச் செய்வதற்குச் சம்மதித்தவன்போல் சென்றது 'நம் அரசனுக்குக் கன்றைப்பற்றி வந்த பழி மாத்திரம் போதாது, நாமும் பழி சுமத்துவோம்' என நினைத்துத்தானோ! எனக்கு நேரிட்ட இடரை யறிந்தும் எரியுங் கொள்ளியை யேறத்தள்ளுவது போலவும், நீண்டெரியும் நெருப்பில் நெய்விடுவது போலவும், அவ்விடருக்குமே லிடருண்டாகும்படி செய்தானே! கப்பல் உடைந்து கலங்கும்போது மந்திரி பழியும் வளைத்துக் கொண்டதே! எனக்கு வந்த துன்பமெல்லாந் தனக்கு வந்ததாக வெண்ணி, என்னை இரவும் பகலும் காத்திருந்த மதியுள்ள மந்திரியை யினி எக்காலத்திற் காண்பேன்! இதைக் கேட்டவர்களெல்லாம் 'இதென்ன கொடுமையோ! கொள்ளை கொண்டவனை விட்டுக் குறுக்கே வந்தவன்மேற் குற்றம் நாட்டியதுபோலவும், கொண்ட மனையாளிருக்கக் கூலிவாங்க வந்தவளைத் தாலிவாங்கச் சொன்னது போலவும், பசுங்கன்றைக் கொன்ற தன் புதல்வனிருக்கவும், அவனைவிட்டு அப்பழியை அமைச்சன்மேல் வைத்து அவனுயிரை வாங்கச் சொன்ன இவ்வரசன் அநியாயக்காரன்' என்று இகழ்ச்சி செய்வார்களே! அறிவில்லாதவன் செய்த காரியம் பயன்படாதது மாத்திரமோ? பழியும் பாவமும் கொடுக்குமென்ற பெரியோர் வார்த்தைக்கு இலக்காயினேன்! ஐயோ! நான் என்ன காரியஞ் செய்தேன்! என்ன காரியஞ் செய்தேன்!" என்றும், 'திருவாரூர்ப் பூங்கோயிலினிடத்தெழுந்தருளிய தெய்வமே! அடுத்தவர்களுக்கு அருள்செய்கின்ற ஆண்டவனே! உன்னை நம்பியிருக்கின்ற அடியேனை இப்படிப்பட்ட சோதனையுஞ் செய்யலாமோ! உன் திருவடிகளுக்கு ஆளாகியிருக்கிற அடியேனை இப்படிப்பட்ட பழிக்கும் ஆளாக்கலாமோ! என்றும் பலவிதமாகப் புலம்பிப் பரிதபித்துக்கொண்டு, "பின்னே துக்கம் தருவதான காரியங்களை முன்னே அறிந்து அக்காரியத்தைச் செய்யாதுவிடவேண்டும்; ஆலோசித்தறியாது செய்துவிட்டால் அதுபற்றித் துயரப்படாமல் மேல் செய்யத்தக்க காரியங்களை ஆலசியப்படுத்தாமல் செய்ய வேண்டுமாதலால், வருவது தெரியாது மந்திரியை யனுப்பிய நாம் துக்கப்படுவதிற் பயனென்ன? இனி நாமே போய்ப் புத்திரனைத் தேர்க்காலி லு‘ர்ந்து, மந்திரி பழிக்கு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்" என்றெண்ணி, அரண்மனைக்குப் புறத்தில் வந்து, தமது புத்திரனை யழைத்து வரும்படி காவற்காரர்களுக்கக் கட்டளையிட்டார்.
அவர்கள் கண்¬ர் வடிந்த முகத்துடன் "ஐயோ! மனுநீதி தவறாத மன்னவனுக்கும் இப்படிப்பட்ட ஆபத்து நேரிடலாமோ! நமது இளவரசனாகிய வீதிவிடங்கனிடத்திற் சென்று 'ஐயா! உம்மை அரசன் அழைத்துவரச் சொன்னார்' என்று எவ்வாறு சொல்வோம்! என்ன செய்வோம்!" என்று துயர்கொண்டு வீதிவிடங்கன் இருக்கும் அரண்மனைக்குச் சென்றார்கள்.
அதற்கு முன்னதாகவே, பெரியோர்களிடத்துப் பிராயச்சித்தவிதியைக் கேட்கப்போன வீதிவிடங்கன் தமது பிதாவினிடத்தில் பசுவானது வந்து முறையிட்ட சமாசாரத்தை ஒற்றர்களாலே கேள்விப்பட்டு 'இனி நமக்கென்ன பிராயச்சித்த மிருக்கின்றது! நமது பிதாவானவர் செய்கிற தீர்ப்பின்படி நடந்துகொள்ளுவோம்' என்று தேகமெலிந்து மேனி வேறுபட்டு, மனந்தளர்ந்து, முகஞ் சோர்ந்து தனது அரண்மனையிடத்து வந்திருந்தான். அப்போது அரசன் அனுப்பிய காவற்காரர்கள் அவ்வீதிவிடங்கனைக் கண்டு கைகுவித்து எதிர் நின்றார்கள். அவர்களைப் பார்த்து 'நீங்கள் என்ன காரியமாக என்னிடத்தில் வந்தீர்கள்? என்று கேட்க, அவர்கள் ஒன்றுஞ் சொல்லாது ஊமைகளைப்போல விம்மிவிம்மி அழுது கண்¬ர் வடித்துக் கொண்டு நின்றார்கள். அதுகண்டு வீதிவிடங்கன், 'இவர்கள் ஏதோ ஒரு துன்பமான சமாசாரத்தைச் சொல்ல வந்தவர்கள் நாவெழாமல் நடுங்குகின்றார்கள்' என்று அறிந்து "ஓ காவற்காரர்களே! வந்த காரியம் இன்னதென்று சொல்லாமல் துக்கப்படுவதில் பலனில்லை; அந்தக் காரியம் எனக்குந் தெரியும், ஆயினும் துயரப்படாமல் சொல்லுங்கள்" என்றான். அதுகேட்டு "ஐயா! எப்படிச் சொல்வோம்! என்ன செய்வோம்! எங்கே போவோம்! எல்லார் குடியையுங் கெடுக்க எங்கே இருந்தோ தாட்சண்யமில்லாத தலையீற்றுப் பசுவானது ஒன்று வந்து ஆராய்ச்சி மணியை யசைத்து இனி உலகத்தை ஆள்வாரில்லாமல் அழிந்துபோகும்படி உம்மை அரசன் அழைத்து வரச் செய்வித்தது" என்று சொன்னார்கள்.
அதுகேட்டு வீதிவிடங்கனைச் சூழ்ந்திருந்த உறவினர் சினேகர் முதலானோ ரெல்லாம் "இப்படிப்பட்ட அவதி நேரிடத்தானோ தியாகேசர் கோயிலுக்குப் போகத் தொடங்கியது! எள்ளளவும் இப்படிவரும் என்று அறியோமே! இதற்கு என்ன செய்வோம்! என்று அழுது சோர்ந்தார்கள். அந்தப் பிரகாரமே அரண்மனையிலுள்ள மற்றவர்களும் புலம்பி ஆவலித்தார்கள். இந்த அழுகையொலியை வீதிவிடங்கன் தாயானவள் கேட்டு இதென்ன காரணமென்று விசாரித்து, இன்ன காரணமென்று அறிந்து, கொழுகொம்பற்ற கொடியைப்போல் கீழே விழுந்து மூர்ச்சையடைந்து, சற்றே அறிவுவரத் தெளிந்து "பாவியாகிய விதி என் பாக்கியத்தை யழித்ததே! தீமையாகிய வினைப்பயன் என் செல்வத்தை யழித்ததே! வஞ்சமாகிய ஊழ் என் வாழ்வை யழித்ததே! பலநாள் வருந்திப் பெற்ற என் வயிறு பற்றுகின்றதே! பகீரென்று பதைக்கின்றதே! ஐயோ! என் புத்திரன் செய்த குற்றத்திற்கு என்னைக் கொன்றாலாகாதோ!" என்று பலவிதமாகச் சொல்லிக் கைநெரித்துக்கொண்டு கண்ர் விட்டுக்கொண்டு வயிறு பிசைந்துகொண்டு மாரடித்துக்கொண்டு வாயில் அறைந்து கொண்டு மனம் பதைத்துக்கொண்டு மண்ணிற் புரண்டு கொண்டு கோ வென்று அழுதழுது புலம்பினாள்.
அப்போது வீதிவிடங்கனென்கிற இராஜபுத்திரன் அழுகின்ற தாய் முதலானவர்களைப் பார்த்து, "வீணாக நீங்கள் அழுது புலம்புகின்றதில் என்ன லாபம்! பிரமதேவன் முதலான கர்த்தர்களுக்கானாலும் விதியைக் கடக்கக் கூடுமோ! எலும்பு நரம்பு தோல் முதலான அசுத்தங்களாற் கட்டிய இந்தச் சிறுவீட்டை நிலையென்று நம்பப்படுமோ! என்று பிறந்தார்களோ அன்றே இறந்தார்களென்று நினைக்கவேண்டும்; ஆறிலுஞ்சாவு நு‘றிலுஞ்சாவென்றும், நிலத்தில் முளைத்த பூண்டுகள் நிலத்திலே மடியுமென்றும், சாமானியரான அசேதனர்களும் சொல்லிக் கொள்ளுகின்றார்களே; அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமற் போனதென்ன? இதுபற்றி எவ்வளவுந் துயரப்பட வேண்டுவதில்லை" என்று பலவிதமான உறுதி வார்த்தைகள் கூறி, அவ்விடத்திலிருந்து புறப்பட்டு மனதில் நாணமும் நடுக்கமும் உண்டாகத் தந்தையாரிடத்திற்கு வந்து தொழுது வணங்கித் து‘ரத்தே நின்றான்.
அப்படி நின்ற புதல்வனை மனுச்சக்கரவர்த்தியானவர் நேரே பாராதவராய் வேறொருவன் முகத்தைப் பார்த்து, "இவன் இளங்கன்றை யெவ்வாறு கொன்றானோ, அவ்வாறு கொலை செய்யப்படுதற்குத் தக்க குற்றவாளி யாயினான்" என்றார். அப்பொழுது புத்திரன் "பசுங்கன்றை கொன்ற அப்போதே உயிர்விட்டுப் பழிக்குப்பழி சரிகட்டுவேன்; ஆனால் தேவரீர் கட்டளை எதிர் பார்த்திருந்தேன்" என்று விண்ணப்பம் பண்ணிக்கொண்டான். உடனே அரசரானவர் கொலை வீரர்களை அழைப்பித்து, "இந்தக் குற்றவாளியை ஏற்பாட்டின்படி கடுங்காவல் செய்து கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கொண்டு போய்க் கிடத்துங்கள்" என்று கட்டளையிட்டார். அந்தக் கட்டளைக்கு அஞ்சி அவ்வீரர்கள் உருவிய கத்தியோடு சூழ்ந்து நடுவே இராஜபுத்திரனைக் காவல் செய்து நடத்திக்கொண்டுபோக, மனுசக்கரவர்த்தியும் மலை போல் உயர்ந்த ஒரு தேரிலேறிக்கொண்டு பின்னே நடந்தார்.
அதுகண்ட அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் "இந்த இராஜகுமாரனுக்கு ஐசுவரியமும் அழகும் அறிவும் குறைவில்லாது கொடுத்த தெய்வம் இடையிலே இந்தப் பழிக்கு ஆளாகச் செய்து, நல்லவிதி நடுவே யிருக்கக் கோணியவிதி குறுக்கே வந்ததென்று சொல்வதற்குச் சரியாக்கியதே! இன்பத்தை யனுபவிக்கின்ற இளமைப் பருவத்தில் எடுக்கப்படாத பழி வந்து சூழ்ந்து, சோறுண்ணும்போது தொண்டை விக்கிக் கொண்டதென்பதுபோல் துன்பத்தை யுண்டுபண்ணியதே! கல்யாணக் கோலங்கொள்வதற்கு இசைந்துவரும் பருவத்தில் செல்வத் திருமேனிக்குத் தீங்கு உண்டாகும்படி, வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி யுடைந்ததென்பதுபோல் நேரிட்டதே! சிவதரிசனத்துக்கப் போனவிடத்தில் சேங்கன்றின் பழி வந்து, கிணறு வெட்டப் போனவிடத்தில் பூதம் புறப்பட்டதுபோல் தோன்றியதே! கடைகொள்ளப் போகும்போது கள்ளன் எதிர்ப்பட்டதுபோல், அருள் பற்றுவரப் போகும்போது இந்தப் புத்திரனுக்கு அந்தக் கன்றானது எமனைப்போல் எங்கேயிருந்து எதிர்ப்பட்டதோ! இந்தக் குமாரனைப் பற்றி நமக்கெல்லாமுண்டாகிய இரக்கம் பழிவாங்கவந்த பசுவுக்கும் உண்டாயிருக்குமானால், ஆராய்ச்சிமணியை யசைத்து முறையிட்டுக் கொள்ளாதே! ஐயோ! இந்தப் பசுவானது சூரியவமிசத்தை யழிக்கத் துசங் கட்டிக்கொண்டதே! இனி நம்மரசனுக்குப் பிற்காலத்தில் நீதியுடன் அரசாட்சி செய்யத்தக்க அரசனைப் பெறாமல் எல்லா உயிர்களும் நிலைதடுமாறி நின்று மயங்குமே; இந்த இராஜபுத்திரன் முன்பு சேனை சூழத் தேரிலேறி வந்த மங்கலமாகிய கோலத்தைக் கண்டு மகிழ்ச்சி யடைந்த நாம் இப்போது இப்புத்திரன் காவல்சூழக் காலால் நடந்து வருகின்ற பரிதாபமாகிய கோலத்தைப் பார்ப்பதற்கு என்ன பாவஞ் செய்தோமோ! இந்தப் புத்திரனுயிர்க்கு ஈடாக நம்முயிரை யெல்லாங் கொடுத்துவிடுவோமென்றாலும் அரசன் சம்மதிக்கமாட்டாரே! இந்தப் புத்திரன் உயிரிழந்தால் பின்பு அரசனும் உயிரிழப்பார், பின்பு நாமிருந்து என்ன செய்வது! இதற்குமுன் இறந்து விடுவதே சுகமாக விருக்கின்றதே! ஆ! ஆ!! நம்மரசனைப் போல இப்படிப்பட்ட அருமையான நீதியோடு அரசு செய்கிறவர்கள் முன்னுமில்லை பின்னுமில்லையே! தியாகராஜப் பெருமான் நமது இராஜனுடைய மனத்தைச் சோதிக்கும்படியாகவே இப்படிச் செய்வித்ததாகத் தோன்றுகிறதே! தரும தேவதை நமது அரசனது உண்மையாகிய நீதியின் தன்மையைச் சோதிக்கும்படி இவ்விதஞ் செய்ததாகத் தோன்றுகின்றதே!" என்று பலவிதமாக அவரவர்களுந் தங்கள் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தென்று நினைத்தம் புலம்பியும் அதிசயித்தும் நின்றார்கள்.
ஆகாயத்தினிடமாக இவ்வதிசயத்தைப் பார்க்கும்படி வந்திருக்கின்ற தேவர்களெல்லாம் "இந்த மனுச்சக்கரவர்த்தியானவன் செய்யத் துணிந்த காரியம் இவனுக்க முன்னிருந்த அரசர்களுக்குச் சொல்லத்தான் கூடுமோ? அல்லது நினைக்கத்தான் கூடுமோ? இம்மனிதர்களைப் பார்க்கிலும் உயர் பிறப்பினராகிய நம்மவர்களுக்குத் தான் செய்யக் கூடுமோ? இவ்வரசன் நீதியிலும் மனோதிடத்திலும் சிறந்தவனாக விருக்கின்றான். இவனுக்குச் சிவகடாக்ஷம் கைகூடுமல்லது மற்றவர்களுக்கக் கூடுமோ? ஆயினும், இன்னும் நடக்கப் போகிற அற்புதங்களை யெல்லாம் பார்த்தறிவோம்" என்று புகழ்ந்து சொல்லி நின்றார்கள்.
இந்தப் பிரகாரமாகச் சொல்லிக்கொண்டு நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் அந்தப் பசுங்கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் போய், தமது புத்திரனைக் காவல் செய்து முன்னே நடத்தி வந்த கொலைவீரத்களைப் பார்த்து "இனிக் காலதாமதம் பண்ணாமல் இந்தப் பசுங்கன்றை யெடுத்து அப்புறத்தே வைத்து, அவ்விடத்தில் இவ்வீதிவிடங்கனைக் கிடத்தி வையுங்கள்" என்று கட்டளையிட்டார்.
அதுகேட்டுக் கொலைவீரர்கள் மனம் பதைத்து மதிமயங்கி நின்றார்கள். அப்பொழுது தந்தையாகிய மனுச்சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டு மயங்கி நிற்கின்ற கொலைவீரர்களை வீதிவிடங்கன் பார்த்து, "நீங்களேன் மயங்கி வருந்துகின்றீர்கள்? அந்தக் கட்டளையின்படி நானே செய்து கொள்ளுகிறேன்" என்று சொல்லித் தியாகராஜப் பெருமான் சந்நிதிக்கெதிராகத் திரும்பி இரண்டு கைகளையுங் குவித்துச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு "சிறு பிள்ளைக்குத் திருப் பாற்கடலை அழைத்துக் கொடுத்த தியாகராஜப் பெருமானே! அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுயம்பிரகாச சாட்சாத்கார சிதாகாச சொரூப சின்மயனாகிய சிவசங்கரனே! அடியேன் பசுங்கன்றைக் கொன்ற பாதகனாயினேன். அதுவும் போதாமல் ஐயோ! எனக்கு நல்வழியைக் கற்பித்துக் கண்போல் விளங்கிய நின்னடிமையிற் சிறந்தவனாகிய மதியுள்ள கலாவல்லபனென்கிற மந்திரியையும் இறப்பிப்பதற்குக் காரணமாகியிருந்தேன்? இப்படிப்பட்ட என்போல் பாவிக ளெங்கேயுண்டு? என் பிதா தண்டிக்கப்போகிற தண்டனை என் பாதகத்துக்குத் தக்க தண்டனையுமல்லவே! என்ன செய்வேன்! பாவியாயினும் எனக்கு வேறொரு கதியுமில்லாதபடியால், முன் தாயைக் கூடித் தந்தையைக் கொலை செய்தவனது மாபாதகத்தை மன்னித்து அனுக்கிரகஞ் செய்ததுபோல், அடியேனுக்கும் அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்; என் பிதாவுக்கும் எனக்கும் உரித்தாகியிருந்த மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி வந்த பழி பாவங்களை நீக்கியருள வேண்டும்; என்பொருட்டு இறந்த மந்திரியை யெழுப்பிக் கொடுத்தருள வேண்டும்; இதோ இந்தப் புலாலுடம்பைப் போட்டுவிட்டு வருகிறேன்; என்னையுந் திருவடி நீழலிற் சேர்த்துக்கொள்ள வேண்டும்; இந்தப் பிறப்பிலே யெனக்குத் திருவடி கிடையாதானால் வரும் பிறப்பிலாயினுங் கிடைக்கத் தக்க நல்லறிவும் பேரன்பும் உள்ளவனாகப் பிறப்பிக்க வேண்டும்" என்று சொல்லி விண்ணப்பஞ் செய்துகொண்டு திரும்பி நின்று, மாதா பிதா குரு முதலானவர்களுக்கும் மனத்தினால் வந்தனஞ் செய்து, "இம் மனுச்சோழருடைய செங்கோல் மாறாது நிலைபெற்றிருக்க வேண்டும்" என்று இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை யுச்சரித்துக் கொண்டு விழுந்து வடக்கே தலையும் தெற்கே காலும் வைத்துக் கொண்டு இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சிந்தையைச் சிவபெருமான் திருவடித் தியானத்தில் வைத்துக்கொண்டு யோகநித்திரை செய்பவன்போல உடம்பைக் கிடத்தினான்.
அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் சிவத்தியானஞ் செய்துகொண்டு, தியாகேசர் சந்நிதியை நோக்கி "அடியேனை யாட்கொண்ட ஆண்டவனே! இவ் வீதிவிடங்கனென்பவன் பசுங்கன்றைக் கொலை செய்தானென்பது பிரத்தியட்சமாக உண்மையென்று வெளிப்பட்டபடியால், இந்தக் குற்றவாளியின் கொலைப் பாதகந் தீரத் தக்க தண்டனை செய்வதற்குச் சக்தியில்லாத அடியேன், தேவரீர் திருவுளப்பாங்கின்படி மேலோர் ஏற்படுத்திய தரும நு‘ல்களில் கொலை செய்தவனைக் கொலை செய்யக் கடவரென்று விதித்திருக்கின்ற விதியின்படி, விதி மாறாட்ட முதலான குற்றங்களுக்குச் சிறிது மிடங்கொடாமல், இவனைக் கொலை செய்யும்படித் திரிகரண சுத்தியாகத் தீர்ப்பிட்டுக் கொண்டு, இதோ தேர்க்காலிலு‘ர்ந்து கொலை செய்யத் தொடங்குகின்றேன், இத் தீர்ப்பினிடத்துத் தேவரீர் திருவடி சாட்சியாக என் மனமறிந்து யாதொருபிசகும் நேரிட்டதில்லை. என்னையுமறியாது ஏதாகிலுங் குறை நேரிட்டிருக்குமானால் அதைத் தேவரீர் மன்னித்துக்கொள்ள வேண்டும். இந்தக் குற்றவாளியின் பாவாத்மாவை அப்பாவத்தினின்று நீங்கும் வண்ணந் தக்க தண்டனை செய்வித் தருளி, மறுபிறப்பிலாயினும் கடைத்தேறும் வழியைத் கடாக்ஷக்கவேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு, தேரிற்கட்டிய குதிரைகளை விழுந்து கிடக்கின்ற வீதிவிடங்கன் கழுத்தடியிற் சக்கரமழுந்தும்படி நேராக முடுக்கித் தேரை நடத்தினார்.
அப்போது தேர்ச்சக்கரமானது வீதிவிடங்கன்மேல் அழுந்திக் கறகறவென்று இழுத்துக்கொண்டு அதிவேகமாகச் செல்ல, உடல் குழம்பிச் சின்னாபின்னப்பட்டு நசுக்குண்டு, கையாற் பிசைந்து ரசம் பிழிந்த மாங்கனியின் கோதுபோல, உடல்வேறு உயிர்வேறாக இறந்தான்.
அதுகண்ட தேவர்களெல்லாம் "அருமையாகப் பெற்ற புத்திரனை நோக்காமல் புண்ணியத்தை நோக்கிய கண்ணியவானே! உனக்குச் சுபகர முண்டாவதாக!" என்று வாழ்த்திக் கற்பகப் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் அதிர்ந்தன. அந் நகரத்தா ரெல்லாம் "இப்படிப்பட்ட நீதி செலுத்துகின்ற மஹாராஜனை என்ன தவஞ்செய்து பெற்றுக் கொண்டோம்" என்றும், ஐயோ! இனி எக்காலத்தில் வீதிவிடங்கனைக் காண்போம்" என்றும் இன்பக் கண்¬ரும் துன்பக்கண்¬ரும் விட்டுக்கொண்டு நின்றார்கள். உடனே மனுச்சக்கரவர்த்தியானவர் மந்திரியின் பழிக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிந்து தேரிலிருந்து கீழே யிழிந்தார். அப்போது ஸ்ரீகண்டர், அனந்தேசர், காலச்செந்தீயுருத்திரர், துவாதசருத்திரர், ஏகாதசருத்திரர், புத்தியட்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்டமூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அசுவாரோகணர், அஷ்டபயிரவர், வீரபத்திரர், சக்ரதரர், நான்முகர் முதலான பதமூர்த்திகளும், கபாலிகன், அசன், புதன், வச்சிரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பலவான், அதிபலவான், பாசாத்தன், மகாபலவான், சுவேதன், ஐயபத்திரன், தீர்க்கபாகு, ஜலாந்தகன், மேகவாகனன், சௌமியகேசன், சடாதரன், லட்சுமிதரன், ரத்நந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்தியாதிபன், ஈசன், சர்வஞ்ஞன், பலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோகனன் முதலான பதத்தலைவர்களும்; இந்திரர், சந்திரர், சூரியர், முதலான தேவர்களும்; வசிட்டர், அகத்தியர், புலத்தியர், பராசரர், வியாசர் முதலான முனிவர்களும், கண்ணுவர், கருக்கர், சதானந்தர் முதலான இருடிகளும்; அசுரர், அந்தரர், ஆகாயவாசிகள், விஞ்சையர், வித்தியாதரர், கருடர், காந்தருவர், இயக்கர், கின்னரர், கிம்புருடர், சித்தர், நிருதர், பூதர், பைசாசர், போகபூமியர், உரகர் முதலான கணங்களும்; நந்தி, பிங்கிருடி, சண்டன், பிரசண்டன், சங்குகன்னன், வாணன், அந்தகன், கும்போதரன், விரூபாக்ஷன் முதலான பிரமத கணங்களும் சூழ்ந்து துதித்து வரவும்; பேரிகை, மத்தளம், தாளம், சங்கம், சச்சரி, தடாரி, முதலான வாத்தியங்கள் முழங்கி வரவும்; "எல்லாம் வல்ல இறைவன் வந்தான்! நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்! முப்புரமெரித்த முன்னோன் வந்தான்! தப்பிலார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்; வள்ளல் வந்தான்! மஹாதேவன் வந்தான்! எள்ளிலெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்! அன்பர்க்கருளும் ஐயன் வந்தான்! இன்பங்கொடுக்கும் இறைவன் வந்தான்! முத்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்! பத்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்! தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்! மூவர்கள் வாழ்த்தும் முக்கணண் வந்தான்!" என்று சின்னங்கள் பிடித்து வரவும்; தும்புருநாரதர் யாழிசை பாடிவரவும்; உருத்திரகணிகையர் நடனஞ்செய்து வரவும்; ஒற்றை வெண்குடை, சாமரை முதலான மங்கல விருதுகள் நெருங்கி வரவும்; ஆனைமுகக் கடவுளும் ஆறுமுகக் கடவுளும் இருபக்கங்களினு மிசைந்து வரவும்; உலகமாதாவாகிய உமாதேவியார் இடது பக்கத்திலிருக்க, சடாமகுட திரிநேத்திர காளகண்ட சதுர்ப்புஜம் முதலானவை விளங்க, தர்மசொரூபமாகிய இடபவாகனத்தின்மேல் சர்வ மங்கல சக்தியே திருமேனியாகக் கொண்ட தியாகராஜப் பெருமான் எழுந்தருளி, மனுச்சோழ ராஜனுக்கு முன் தரிசனங் கொடுத்தருளி, குளிர்ந்த நிலவு துளம்பி வீசுகின்ற புன்னகைகாட்டி, அரசனுக்கு ஜில்லென்று உடம்பும் உள்ளமும் உயிரும் குளிரும்படி செய்வித்து, கருணை யென்னும் வெள்ளம் நிறைந்து பொங்கித் ததும்பிப் பெருக்கெடுத்து ஒளி கொண்டோங்கி மடைதிறந்தோடுகின்ற மலர்போன்ற திருக்கண்களால் அருள்நோக்கஞ் செய்து, அவ்வரசனுக்குண்டாயிருந்த விடாய் முழுதுந் தீர்த்து, "நம்மிடத்து நம்பிக்கையும் பேரன்பும் வைத்து மனுநீதிதவறாது அரசாட்சி செய்கின்ற மனுச்சோழனே! நீ நடத்துகின்ற நீதியின் பெருமையை உலகத்தவர் செவ்வையாகத் தெரிந்து கொள்ளும்படி நாமே இவ்வாறு சோதித்தோம், இனி ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்" என்று திருவாய் மலர்ந்தருளி, இறந்துகிடக்கின்ற பசுங்கன்றும் கலாவல்லபனென்னும் மந்திரியும் வீதிவிடங்கனென்னும் இராஜ குமாரனும் உயிர் பெற்று எழுந்திருக்கும்படி கடாக்ஷத்தருளினார்.
அந்தக்கணமே நித்திரை நீங்கி யெழுகின்றதுபோல், இளங்கன்றானது உயிர்பெற்றெழுந்து தன் தாய்ப் பசுவினிடத்தில் சென்றது. மந்திரியும் புதல்வனும் உயிர்பெற்றெழுந்து, ஆண்டவனை வணங்கி அருகே மலர்ந்த முகத்தோடு வந்தனை செய்துகொண்டு மகிழ்ந்து நின்றார்கள். அதுகண்டு அந்நகரத்திலுள்ள ஜனங்களும் மற்றவர்களும் தம்மை யறியாத பெருங் களிப்புடையவர்களாய்ச் சிலர் "அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அற்புதம்! என்று ஆடினார்கள்; சிலர் "பண்ணிய பூசை பலித்தது பலித்தது!" என்று பாடினார்கள்; சிலர் "சூரியகுலந்தோன்றியது! தோன்றியது! என்று துதித்தார்கள்; சிலர் "துக்கம் நீங்கியது! சுகம் கிடைத்தது!" என்று துள்ளினார்கள்; சிலர் "குறையெல்லாந் தீர்ந்தது! குறையெல்லாந் தீர்ந்தது!" என்று கொண்டாடினார்கள்; சிலர் "கும்பிட்ட தெய்வம் குறுக்கேவந்தது!" என்று குதித்தார்கள்; சிலர் "எம்பெருமான் எதிர்ப்பட்டால் என்ன முடியாது!" என்று எக்களித்தார்கள்; சிலர் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டு ஒரு காதமட்டும் ஓடித் திரும்பினார்கள்; சிலர் தோள் தட்டிக் கொண்டும் தொடை தட்டிக்கொண்டும் முகரோமத்தை முறுக்கிக்கொண்டும் முகமலர்ந்துகொண்டும் உடல் நிமிர்த்துக்கொண்டும் உலாவி நின்றார்கள்; சிலர் "வாழ்வு வந்தது!" என்று மனம் பூரித்தார்கள்.
இப்படி அவரவர்களும் அளவில்லாத ஆனந்தமுடையவர்களாய் இழந்துவிட்ட பொருள் எதிர்வரப் பெற்றவர்கள்போல் சந்தோஷகோஷஞ் செய்து நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் கங்கையும் இளம்பிறையும் விளங்குகின்ற சடாமகுடத்தையும், திரிபுண்டரமுந் திலகமும் திருநோக்கும் விளங்குகின்ற நெற்றியையும், அருள் ததும்பி வழிகின்ற திருநோக்கங்களையும், சங்கு குண்டலமணிந்து தாழ்ந்த செவிகளையும், நறுங்குமிழ் போன்று விளங்குகின்ற நாசியையும், வேதமாகிய தெள்ளமுதத்தைக் கொள்ளைகொண்டு உண்ணும்படி அன்பர்களுக்கு அருளிச் செய்கின்ற செம்பவளம் போன்ற திருவாய் மலரையும், வானவர்க்கு உயிர் கொடுத்த மணிகண்டத்தையும், கொன்றைமாலை யணிந்து குலவரைகள்போல் உயர்ந்த திருத்தோள்களையும், மானும் மழுவும் வரதமும் அபயமுங் கொண்ட மலர்க்கரங்களையும், சிவந்துமெல்லென்று திருவருள் பழுத்து ஆனந்தமொழுகிப் பத்தர்கள் மனத்தில் தித்தித்திருக்கும் பாதமலர்களையும், செம்பவளமாலை போன்ற திருமேனியையும், பச்சைக்கொடி படர்ந்ததுபோன்று பார்வதியார் மகிழ்ந்து விளங்குகின்ற பாகத்தையும் கண்குளிரக் கண்டு களிப்படைந்து ஆனந்தநீர் ஊற்றுநீர் போலச் சுரந்து சுரந்து விழுந்து விழுந்து மார்பினிடத்து வண்டலாடவும், உடல் குழைந்து விதிர்விதிர்த்துச் சிலிர்சிலிர்த்து மயிர்க்கூச்செறிந்து என்பு நெக்குவிட்டுருகியும், மனங் கனிந்துகனிந்து கசிந்துகசிந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து படபடவென்று பதறிப்பதறி உருகியுருகி ஆனந்த வெள்ளத்தி லழுத்தியழுந்திப் பரவசமாகியும், "சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிற்பர தற்பர சிற்குண சின்மய சிவசிவசிவ" என்று வாய்நீர்சுரந்து பாடிப்பாடி நாக்குழறித் தழும்பேறியும், "ஹர ஹர" என்று ஆனந்தக் கூத்தாடியும், தண்டுபோல் அனந்த முறை கீழே விழுந்து விழுந்து வணங்கி உடம்பிற் புழுதியாடியும், குளிர்ச்சி பொருந்திய சந்திரபிம்பம் போன்ற முகத்தின்கண் முத்துமாலை யணிந்ததுபோல வியர்வரும்பி இளநகை தோன்றி மலர்ந்து விளங்கக் கைகளைக் கூப்பிச் சிரசின் மேல் வைத்துக்கொண்டு, அன்பே வடிவமாகி நின்று, "பிரமன் முதலாகிய பெரிய தேவர்களெல்லாம் அரியதவஞ் செய்தும் கனவினுங் காண்பதற் கருமையாகிய கடவுளே! அன்பு அணுவளவு மில்லாத அடியேனுக்கு அருமையாகிய திருமேனியை நனவிலே எளிதாகத் காட்டியருளிய தேவரீர் பெருங்கருணையை யென்னென்று துதிப்பேன்! பொய்யுலகத்தை மெய்யென்று நம்பிப் புன்மையாகிய போகத்தை விரும்பி, புவியாண்டு மீளாநரகில் விழத் துணிந்திருந்த அஞ்ஞானத்தையுடைய அடியேனையும் ஓர் பொருளாகத் திருவுள்ளத்திற் கொண்டு காட்சி கொடுத்தருளிய கருணைக் கடலே! கண்ணுண் மணியே! கரும்பின் சுவையே! கற்பகக் கனியே! கருணாநிதியே! தேவரீர் திருவருட்பெருமையை யென்னென்று சொல்லுவேன்! யான் என்கின்ற ஆணவப் பேயும், எனதென்கின்ற இராட்சதப் பேயும், மாயையென்கின்ற வஞ்சப் பேயும், பெண்ணாசை யென்கின்ற பெரும்பேயும், மண்ணாசை யென்கின்ற மானிடப்பேயும், பொன்னாசை யென்கின்ற பொல்லாப் பேயும், குரோத மென்கின்ற கொள்ளிவாய்ப்பேயும், உலோப மென்கின்ற உதவாப்பேயும், மோகமென்கின்ற மூடப் பேயும், மதமென்கின்ற வலக்காரப்பேயும், மாச்சரிய மென்கின்ற மலட்டுப்பேயும், மனப்பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட, ஆடியாடி யிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ள மிரங்கித் தரிசனங் கட்டளையிட்டுத் துன்பத்தை நீக்கி யின்பத்தை யளித்த எம்பெருமானே! என்னாண்டவனே! என் தந்தையே! என் தாயே! என் குருவே! என் தெய்வமே! என் குலதெய்வமே! என்னுயிர்த் துணையே! என்னறிவுக் கறிவாகிய இறைவனே! தேவரீர் திருவடிப்புகழை வேதங்களு மறியாது விழித்துக் கொண்டு தேடித்தேடி இளைக்கின்றன வென்றால், கிருமி கீடங்களிலுங் கீழ்ப்பட்ட அசேதனனாகிய அடியேன் எப்படியறிந்து துதிப்பேன்! தேவரீர் திருவடிக் காட்சி பலிக்கும்படி செய்வித்த இந்தப் பசுவுக்குங் கன்றுக்கும் என்னை யடிமையாகக் கொடுப்பேன் அல்லது வேறென்ன கைம்மாறு செய்வேன்! தேவரீர் திருமேனிக்காட்சி கிடைப்பதற்குக் காரணமாகிய வீதிவிடங்கனென்னும் புத்திரன் இன்றுதான் எனக்குப் புத்திரனாயினான்! தேவரீரது திருவருட் கோலத்தைக் காணப்பெற்ற அடியேனுக்கு இனி என்னகுறை இருக்கின்றது! அன்பர்களுக்கு இன்பமளிக்கின்ற ஆண்டவனே! தேவரீர் கிருபாநோக்கஞ் செய்யப் பெற்று உடல்பூரித்தேன்! உள்ளங்குளிர்ந்தேன்! உயிர் தழைத்தேன்! பசுங்கன்றும் மந்திரியும் மைந்தனும் உயிர்பெற்று எழுந்திருக்கவும் வரம்பெற்றேன்! வாழ்வடைந்தேன்! துக்க மெல்லாம் நீங்கினேன்! சுகப்பட்டேன்! மனத்துக்கு அடங்காத மகிழ்ச்சிகொண்டு நின்றேன்! இனி அடியேனுக்குத் தேவரீர் திருவடியினிடத்துத் தவறாத தியானமும் சலியாத அன்பும் தந்தருளி யென்னை அடிமை கொள்ளவேண்டும். குற்றஞ் செய்தாலும் குணமாகக் கொள்கின்ற குணக்குன்றே! பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த பரம்பொருளே! புலிமுலையைப் புல்வாய்க்குக் கொடுத்த புண்ணியமூர்த்தியே! கல்லடிக்கும் வில்லடிக்குங் கருணைபுரிந்த கருத்தனே! திருவாரூர்ப் பூங்கோயிலி லெழுந்தருளிய தியாகராஜப் பிரபுவே! போற்றி! போற்றி!" என்று தோத்திரஞ் செய்து தொழுதுநின்றார்.
அரசன் செய்த தோத்திரங்களைத் திருச்செவி ஏற்றுக்கொண்டு தியாகராஜப் பெருமான் "நம்மிடத்தில் அன்புள்ள அரசனே! நீ இன்னும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, நமது அருளே துணையாகக்கொண்டு, இவ்வுலகத்தை யெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, மெய்யறிவு விளங்கி, மாறாத மகிழ்ச்சியோடிருக்கக் கடவாய்! பின்பு எக்காலத்தும் மீளாத பேரானந்த போகத்தை நாம் தருவோம்" என்று அருள்புரிந்து கணங்களுடன் அந்தர்த்தானமாக எழுந்தருளினார்.
அது கண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு "என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போ லெனக் கினியவர்கள் உண்டோ!" என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடை கொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அதுகண்டு மனுச்சக்கரவர்த்தியானவர் பின்பும் கீழ் விழுந்து நமஸ்கரித்துத் தொழுது தோத்திரஞ் செய்துகொண்டு, அப்பசுவையுங் கன்றையும் உபசாரத்துடன் நல்ல புல்லுள்ள விடங்களில் மேய்த்து மிகுந்த சுகத்திலிருக்கும்படி செய்வித்து, கலாவல்லபனைக் கட்டியணைத்துக் கொண்டு "என் புத்திரன் பழிக்கு ஈடாகச் செய்தற்கரிய செய்கையைக் செய்துகொண்ட அன்புள்ள அமைச்சனே! உன்போலெனக் கினியவர்கள் உண்டோ!" என்று உபசரித்து, பின்பு மைந்தனும் மந்திரியுந் தாமுமாகக் கமலாலயமென்னும் கோயிலுக்குச் சென்று, ஆசாரத்தோடும் அன்போடும் விதிப்படி சிவபெருமானைத் தரிசனஞ் செய்து அபிஷேகாதி சிறப்புகளும் அனேகம் திருப்பணிகளஞ் செய்வித்துத் தொழுது வணங்கித் துதித்து வலங்கொண்டு விடைகொண்டு புறப்பட்டு, அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் மனங்களித்து வாழ்த்திப் புகழும்படி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியை வலமாக வந்து, அஷ்டமங்கலங்க ளேந்திய சுமங்கலிகளும் அந்தணர் அமைச்சர் முதலானவர்களும் வாழ்த்தி மங்கலச் செய்கைகளோடு எதிர்கொள்ள அரண்மனையிற் சென்று, வேதியர், துறவினர், விருந்தினர், உறவினர், முதலானேர்களுக்கு அவரவர்க்குத் தக்க வரிசைகளைச் செய்து மகிழ்வித்து, கற்புநிலை தவறாத மனைவியார் மனங்குளிர்ந்து களிக்கும்படி மைந்தனைக் காண்பித்து, மந்திரி முதலானவர்கள் குழச் சிவானுக்கிரகத்தால் சிங்காசனாதிபதியாய் உலகத்தையெல்லாம் ஒருகுடைநிழலில் வைத்து அறநெறிப்படியே அரசாட்சி செய்திருந்தார்.
வாழ்த்து
நேரிசை வெண்பா
வாழி மனுச்சோழர் வாழி யவர்மைந்தன்
வாழியவர் மந்திரியாம் வல்லவனும்-வாழியவர்
செங்கோன் முறையவர்தஞ் சீர்கேட் பவர்வாழி
எங்கோன் பதம்வாழி யே.
திருச்சிற்றம்பலம்
மனு முறைகண்ட வாசகம் முற்றிற்று
-
Hits: 2038 -
Hits: 2033 -
Hits: 1399 -
Hits: 1255 -
Hits: 1243 -
Hits: 1192 -
Hits: 1178 -
Hits: 1190 -
Hits: 1179 -
Hits: 1155 -
Hits: 1187 -
Hits: 1176 -
Hits: 1126 -
Hits: 1150 -
Hits: 1128 -
Hits: 1114 -
Hits: 1126 -
Hits: 1234 -
Hits: 1126 -
Hits: 1151 -
Hits: 1157 -
Hits: 1228 -
Hits: 1142 -
Hits: 1177 -
Hits: 1261