2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
 
2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்

திருமுகம் 1

இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய

15-2-1859

சிவமயம்
கல்வி கேள்விகளாற் சிறந்து சிவபக்தி ஜீவகாருண்யஞ் சாந்தம் அன்பு முதலிய நற்குணங்களைப் பெற்ற நண்பர்க்கு அனந்தமுறை வந்தனம் வந்தனம் வந்தனம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களைக் கேட்க மிகவும் விருப்பமுள்ளவனாக விருக்கிறேன்.

தைமாசம் 20ஆம் தேதி தபால் மார்க்கமாகத் தாங்கள் வரவிடுத்த கடிதம் வரப்பெற்று வாசித்தறிந்து கொண்டேன். அதற்கு முன் மேற்படி தை மாதத்தில் தங்களுக்கு நான் எழுதி யனுப்புவித்த கடிதம் தங்களிடம் வந்து சேர்ந்ததில்லை போலத் தோன்றுகின்றது. அதை மன்னிக்க வேண்டும். 'நல்லாரெனத் தானனி விரும்பிக் கொண்டாரை அல்லாரெனினு மடக்கிக் கொளல் வேண்டும்'* என்றபடி மகாராஜராஜஸ்ரீ ரத்ன முதலியாரைத் தாங்கள் அடக்கிக்கொண்டது பெரிய காரியம். அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் வாக்கினால் சமீபித்தும் மனத்தினால் நெடுந்தூரமாகியும் இருக்கவேண்டும். மகாராஜராஜஸ்ரீ மாப்பிள்ளை முதலியார் முதலானவரிடங்களிலும் இப்படியே இருக்கவேண்டுமென்று நான் சொல்ல வேண்டுவதென்ன, தங்களுக்குத் தெரிந்ததுதானே.

* நல்லா ரெனத்தான் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கு முண்டு. - நாலடியார் 221

ஐயா! தற்காலத்தில் தங்கள் மனத்தில் நேரிட்ட சஞ்சலங்களை நிவர்த்தி செய்து இனியொரு காலங்களிலும் வாராதவண்ணம் பாதுகாத்து சதா சவுக்கியத்தைப் பெற்று சந்தோஷமடைய அனுக்கிரகிக்க வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். தாங்களும் இரவும் பகலும் நமது ஆண்டவனை இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டு சாக்கிரதையோடு இருக்கவேண்டுமென்று தங்களையும் பிரார்த்திக்கிறேன். நம்மைப் பெற்ற தாயைப் பார்க்கிலும் அனந்தங்கோடி பங்கு நம்மிடத்தில் தயவுள்ளவன் நமது ஆண்டவன். ஆகலால் நமக்கு ஒரு காலத்திலுங் குறைவு நேரிடாது. இது சத்தியம். ஆனால் நாம் நம்பிக்கை தவறாது இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் விரித்துத் தங்களுக்குச் சொல்லவேண்டுவ தென்ன. என் போன்றவர்களெத்தனை பேருக்கோ தாங்கள் சொல்ல வல்லவர்களாக விருக்கின்றீர்கள். தங்களிடத்தில் நான் என்ன காரியஞ் சொல்லி யிருந்தேனோ அந்தக் காரியந் தங்கள் மனமாட்டில் நிற்குமல்லவா. ஆதலால் அந்தக் காரியத்தைக் குறித்தே தற்காலம் பிரயத்தனப் பட்டுக்கொண் டிருக்கிறேன். நமது ஆண்டவன் அனுக்கிரகத்தால் அது முடியுங் காலத்தை இன்னுஞ் சில நாளில் தெரிந்து கொள்ளலாம். தாங்கள் இப்போது இவ்விடம் விஜயஞ்செய்ய எந்த விதத்திலும் எண்ண வேண்டுவதில்லை. நான் வந்துவிடுகிறேன். தாங்கள் வரவுக்குத் தக்க செலவு செய்துக்கொண்டிருக்க வேண்டும். பின்பு இஷ்டப்படி யெல்லாஞ் செய்ய நமது ஆண்டவன் அனுக்கிரகிப்பான். இதற்குச் சந்தேகமிராது. இது உண்மை. இந்த உண்மை தங்களுக்குத்தான் தெரியும். ஆதலால் தங்கள் மட்டில் இது தெரிவித்தேன். ஐயா! நானோ புத்தி தெரிந்த நாள் தொடங்கி இதுபரியந்தமும் இந்தப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் பெருஞ் சுமையாக இருக்கின்றதே. ஐயோ, இது என்றைக்குத் தொலையும் என்று எண்ணி எண்ணி இளைத்துத் துன்பப் படுகின்றவனாக இருக்கிறேன். இப்படிபட்ட இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய. ஐயா, என்னைக் குறித்துத் தாங்கள் பண விஷயத்தில் பிரயாசமெடுத்துக் கொள்ளவேண்டாம். தாங்கள் வேறு விதத்திலும் செலவுக்கு இடம் பார்க்கவேண்டாம். தாங்கள் மார்கழி மாதம் மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீமுதலியார் நற்குண மணியாகிய சீனிவாச முதலியார்க்கு எழுதிய கடிதத்தால் அவர்கள் என்னைக் கேட்க நான் மறுக்க, மறித்தும் தங்கள் கடிதம் வர, இதனால் தங்கள் மனத்திற்கு வருத்த முண்டாமென்று மேற்படி முதலியார் அவர்களிடத்தில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டேன். மற்றவை அவாளிடத்திற்றானே யிருக்கிறது. இதனை தாங்கள் அறியவேண்டும். மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீ சீனிவாச முதலியார் மிகவு நல்லவர்கள். சிநேக பாத்திரர்கள், நல்ல புத்திமான்.

தங்கள் மட்டில் எழுதிய இந்தக் கடிதம் தங்கள் மட்டில் தானே இருக்க கிர்பை செய்யவேண்டும்.
மற்ற சங்கதிகளைப் பின்பு தெரிவிக்கிறேன். சரணம்.

மாசி மாதம் 5ஆம் நாள்

இங்ஙனம்*
சிதம்பரம் இராமலிங்கம்.

இஃது
சென்னப்பட்டணம் ராயல் வோட்டெல் மஹா
ராஜராஜஸ்ரீ முதலியா ரவர்கள் பு. வேலு முதலியார்
அவர்கள் திவ்ய சமுகத்திற்கு வருவது.
சரூர் சரூர்
* கையொப்ப மிட்டிருக்கக் கூடிய இடம் வழிபாட்டிற்காகக் கத்தரித்து எடுக்கப்பட்டிருக்கிறது.
* * *


திருமுகம் 2
நடராஜப் பெருமான் திருஉளம்
23 - 5 - 1862

சிவமயம்

அன்பு அறிவு ஒழுக்க முதலிய நற்குணங்களைப் பூஷணமாக மேம்பாட்டிற் பூண்டு என் மனத்தி லிடைவிடாது கண்மணி போன்று இருந்த தங்கட்கு விண்ணப்பம்.

தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுள்ளவனாக விருக்கின்றேன். சித்திரை மாதம் 26ஆம் தேதி தாங்கள் அனுப்பிய கடிதம் வையாசி மாதம் 17ஆம் தேதி* என்னிடத்தில் வரப்பெற்றேன். நான் கனவினும் தங்களை மறக்கின்றவனல்ல. மறந்தவனுமல்ல. ஆனால் கால வேற்றுமையாலே நான் மறந்தவனாகத் தங்களுக்குத் தோற்றுகின்றது. அவ்வாறு எண்ணவேண்டாம். இது சத்தியம்.

நான் இந்த விசை பிரயாணப்பட்டு வருவது அவசியமானது என்று நம்பிக்கையோடு சொல்லுவேன். ஆயினும் சில தினம் ஏறும் அல்லது குறையும். அவ்வளவே அன்றி வருவது மாத்திரம் உண்மை. ஆகலால் தாங்கள் வரவேண்டுவதில்லை. அவசியம் நான் வருவேன் வருவேன் வருவேன். ஆனால் நடராஜப் பெருமான் திருவுளம் அறியேன். எவ்விதத்தினும் வருவதற்கு மாத்திரம் சந்தேகமில்லை. தங்கள் ஞாபகம் எக்காலத்திலும் என் மனத்தைவிட்டு நீங்காது விரித்து எழுதுவதற்கு சமய நேரிடாதபடியால் இந்த மட்டில் நிறுத்தினேன். மன்னிக்கவேண்டும். அநேக வந்தனம்.

வைகாசி மாதம் 11ஆம் நாள்

இங்ஙனம்
சி. இராமலிங்கம்.

இஃது
சென்னப்பட்டணம் ராயல் ஓட்டல் மஹாராஜ
ராஜஸ்ரீ முதலியார் வேலு முதலியா ரவர்கள் திவ்ய
சமுகத்திற்கு.
* இவற்றில் ஏதோ தவறு இருக்கிறது.
* * *

திருமுகம் 3
இடைவிடாத சிவ சிந்தனை
7-11-1862

அன்பு அறிவு கல்வி கேள்வி முதலியவற்றில் சிறந்து சிவநேயத்தில் நிறைந்து விளங்கிய தங்கட்கு வந்தனம் வந்தனம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேனல்லது வேறொன்றும் விரும்பினே னில்லை. தாங்கள் சுமார் இருபது தினத்திற்கு முன் எழுதி தபாலில் அனுப்பிய கடிதம் கூடலூரில் வந்து சேரப்பெற்று அதிலுள்ள சங்கதிகளை யெல்லாம் அறிந்து கொண்டேன். நான் ஐப்பசி மாதம் 10ஆம் தேதி கூடலூரைவிட்டுப் புறப்பட்டு அவசியமான ஒரு காரியம்பற்றி கருங்குழிக்கு வந்தேன். இனி தங்கட்கு முன் குறித்தபடி வட மேற்கே ஒரு ஊர்க்கு வேறொரு காரியத்தின் பொருட்டு சுமார் 20 தினத்திற்குள் பிரயாணம் செல்வது உண்மை. அங்கிருந்து புறப்பட்டு சென்னப்பட்டணம் வருவது நிச்சயம். ஆனால் நிறைய மூன்று மாசஞ் செல்லும்போல் தோன்றுகிறது. தாங்கள் என் மேல் தயவுசெய்து அது பரியந்தம் சகித்திருங்கள். மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்களுக்கும் இவ்வாறே தெரியப்படுத்துங்கள். இது விஷயத்தில் செலவுக்கு ஒன்றும் வேண்டுவதில்லை. வேண்டியிருந்தால் வேண்டிய போது தெரிவிக்கிறேன். தாங்கள் தேக முதலிய கருவிகளை சாக்கிரதையொடு வைத்துக்கொண்டும் சிவபஞ்சாக்ஷரியையும் சிவபெருமான் திருவடிகளையும் இடைவிடாது சிந்தித்து தியானித்து வரவேண்டுமென்பது என் பிரார்த்தனை. தங்களை ஒரு கணப் போதாயினும் மறந்தவனல்ல. தாங்கள் கூடிய மட்டில் சர்வஜாக்கிரதையோடும் இப்போது இருக்கிறபடியேயிருங்கள். இன்னுஞ் சில காலத்துள் விசேஷ சவுக்கியம் நேரிடுமென்று உண்மையாகச் சொல்லுகிறேன்.

வந்தனம் வந்தனம்.

ஐப்பசி மாதம் 23ஆம் நாள்

சிதம்பரம்  இராமலிங்கம்.

இஃது

சென்னப்பட்டணம் ராயல் ஓட்டல் மகாராஜராஜஸ்ரீ
முதலியார் வேலு முதலியா ரவர்கள் திவ்ய
சமுகத்திற்கு.
* * *


திருமுகம் 4

அவ்வையார் திருவாக்கு சத்தியம்
2-3-1863

சிவமயம்
அன்பு அறிவு தயவு முதலிய சுபகுணங்களிற் சிறந்து நமது கண்மணி போன்றுள்ள நண்பர்க்கு வந்தனம் வந்தனம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.

மாசி மாசம் 18ஆம் தேதியில் எழுதி தபாலில் விட்ட தங்கள் கடிதம் என்னிடத்து மேற்படி 20ஆம் தேதியில் வரப்பெற்று அதிலுள்ள சங்கதிகளை அறிந்த நான் துன்பக் கடலில் விழுந்தேன். இன்னும் எழுந்ததில்லை. ஆனால் எழுந்திராமலிருக்க மாட்டேன். தங்களுடம்பிற்கு அபக்குவமென்று அறிந்த பொழுதே என் மனம் தங்களைப் பார்க்க வேண்டு மென்றும் தங்களுக்கு சவுக்கியம் உண்டாக வேண்டு மென்றும் கடவுளைச் சிந்தித்துக்கொண் டிருக்கின்றது. இது மாத்திரமோ, என் கண்கள் தங்களைக் காணவேண்டுமென்று துடிக்கின்ற என் கால்கள் தாங்களிருக்கும் திசையை நோக்கி நடக்கவேண்டுமென்று ஊருகின்றது. இவைகளைத் தற்காலத்தில் ஒரு பெரிய நிர்ப்பந்தத் தடுக்கின்றது. அதை தெரிவிக்கிறேன். நான் பொசிக்கின்ற ரெட்டியார் வீட்டில் தற்காலத்தில் எசமானராக விருக்கிற ராமகிருஷ்ண ரெட்டியார் என்பவர்க்கு சுமார் 4 மாசந் தொடங்கி உஷ்ண பேதியாகிக் கொண்டிருந்தது. மத்தியில் மத்தியில் நிற்பதும் பேதியாவதுமாக இருந்தது. இப்பொழுது சுமார் இருபது தினமாக வரை கடந்த பேதியாகி எழுந்திருக்க மாட்டாமல் மலசலம் படுக்கையில்தான் விடும்படியான அவ்வளவு அசத்தியும் மெலிவுமாக இருப்பது. சுமார் எட்டு தினத்திற்கு முன் போய்விட்ட தென்று கைவிட்டு விட்டார்கள். பின்பு சிவானுக்கிரகத்தால் அணுமாத்திரம் சௌக்கியம்போல் தோற்றுகின்றது. இப்படிப்பட்ட வேளையில் நான் புறப்பட்டு வந்தால் உலகம் நிந்திக்கும். கடவுளுக்குஞ் சம்மதமிராது. ஆனபடியால் அஞ்சுகிறேன். என்ன செய்வேன். அவர்க்கு உடம்பு சிறிது பக்குவமானால் புறப்பட்டு விடுவே னிற்கமாட்டேன். கடவுள் என்ன நினைத்திருக்கிறாரோ, அதுவுந் தெரிந்ததில்லை. சிவானுக் கிரகத்தால் பக்குவப்படுவதாக விருந்தால் 1? மாசஞ் செல்லும் சிறிது எழுந்து நடக்கவென்று தோற்றுகிறது. ஆதலால் கொஞ்சம் லகுவான வுடனே பிரயாணப்பட்டு தங்களைப் பார்க்க வருவேன். உண்மை. தாங்கள் கூடியவரையில் சாக்கிரதையாக விருந்து உடம்பை பக்குவஞ்செய்து கொள்ளவேண்டும். நான் இடைவிடாது கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

சிவமயம்

தாங்கள் அஞ்சவேண்டாம். 'சிவாயநம வென்று சிந்தித்திருப்பார்க் கபாய மொருநாளு மில்லை உபாயம் இதுவே மதியா மிதல்லாத வெல்லாம் விதியே மதியாய்விடும்' என்ற அவ்வையார் திருவாக்கு சத்தியம் சத்தியம் சத்தியம். ஆதலால் அதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டே வாருங்கள். தங்கள் பிணிகள் பறந்தோடிப்போம். இதை நம்பவேண்டும். தாங்கள் பயப்படாது இருக்க வேண்டும்.

மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்களுக்கு தெரிவிக்கவேண்டியது ஒன்று. என்னெனில் நான் அவசியம் வருகிறேன். அது பரியந்தம் தேகசாக்கிரதை மனோசாக்கிரதை முதலான சாக்கிரதையோடு அஞ்சாமல் இருக்கவேண்டு மென்று தெரிவிக்க வேண்டும். ஸ்ரீ சிதம்பர சாமிகள், மகாராஜராஜஸ்ரீ ரத்தன முதலியார் முதலானவர்களுக்கும் பர்வதம்மாளுக்கும் என் வந்தனம் குறிப்பிக்க வேண்டும். தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். வந்தனம்.
மாசி மாதம் 20ஆம் நாள்

இங்ஙனம் சிதம்பரம்
இராமலிங்கம்
* * *


திருமுகம் 5
நிம்மதி இல்லை



சிவமயம்

நற்குணங்களிற் சிறந்த நண்பராகிய தங்கட்கு வந்தனம் வந்தனம். தாங்கள் பங்குனி மாதம் 18ஆம் தேதி சுக்கிர வாரம் காலையில் எழுதி விட்ட கடிதம் வரக்கண்டு அதிலுள்ள சங்கதிகளை அறிந்து கொண்டேன். இதன் அடியில் எழுதுகின்றவைகளை கவனமாகப் பார்க்க வேண்டும். என்னெனில் நான் பங்குனி மாசக் கடைசியில் வருவதாக முன் குறித்திருந்தது உண்மைதான். ஆனால் நான் ஒருவர் நிமித்தம் ஒப்புக்கொண்ட ஒரு காரியம் இன்னும் முடிவுபெற இல்லை. அது பங்குனி மாதம் கடைசியில் முடிந்தாலும் அல்லது சித்திரை மாசத்தில் முடிந்தாலும் முடிந்தவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வருவேன். இது உண்மை. இது நிற்க, எனக்கு நிம்மதி யில்லாமல் தாங்க ளிவ்விடம் வந்தால் தங்களுக்கு எப்படி நிம்மதி வரும். வாராது. ஆதலால் நான் அவ்விடம் வருமளவும் தாங்கள் இவ்விடம் வாராமலிருக்க வேண்டும். இதை அலக்ஷியமாக எண்ணவேண்டாம். எந்த விதத்திலும் நான் அவ்விடம் வரத்தா னிருக்கிறேன். வருவேன் வருவேன். அவசரப்படவேண்டாம். அவசரப் பட்டால் நிம்மதி வாராது. ஆதலால் பொறுத்திருங்கள். எவ்விதத்திலும் என் இஷ்டப்படியே தாங்களிருந்தால் நன்மை. இது உண்மை உண்மை. கடிதம் அகப்படாத குறையால் இந்த மட்டில் எழுதினேன். மன்னிக்க வேண்டும். வந்தனம்.

பங்குனி மாதம் 26ஆம் நாள்

சி. இராமலிங்கம்
மகாராஜராஜஸ்ரீ முதலியார் வேலு முதலியார் அவர்கள்...
***


திருமுகம் 6

பாயிரங்கள்



சிவமயம்

அன்பு அறிவு கல்வி கேள்வி முதலியவற்றில் சிறந்த தங்களுக்கு வந்தனம். தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். தங்கள் மனத்திலுள்ள குறிப்பை சிரஞ்சீவி சுந்தரப் பிள்ளையால் தெரிந்து கொண்டேன். தாங்கள் உலகநடை தெரிந்த விவகாரிகளாதலால் தாங்களே தங்கள் கருத்தின்படி செய்துக்கொள்வதில் யாதொரு விகற்பமும் நேரிடாதென்று நம்புகிறேன்.

நான் அது விஷயத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் தாங்கள் நேரே அவர்களை அழைத்து ஒருமையோடு தங்கள் கருத்தின்படி ஏற்பாடு செய்துக்கொள்வது உத்தமமாகத் தோன்றுகிறது. தங்கள் கருத்தின்படி செய்துக் கொள்வதற்கு நான் தடையானவ னல்ல.

ஆகலில் யாவர்க்கும் மனது விகற்ப மாகாதபடிக்கும் தயவு வேறுபடாதபடிக்கும் தங்கள் கருத்தின்படி நடத்தலாம். மற்ற சங்கதிகளை தை மாதத்தில் தெரிவிக்கிறேன். வந்தனம்.

மார்கழி மாதம் 15ஆம் நாள் 

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

தாங்கள் என் விஷயத்தில் மிகவும் சுதந்தர முடையவர்க ளாதலால் இப்படி எழுதினேன்.

அன்புடைய ஐயா

நமது சுந்தரப்பிள்ளை எழுதின பாயிரம் நன்றா யிருக்கின்றது. அதை அச்சிடுவிப்பீர்களாக.
அன்றி நமது சிதம்பர சாமிகள் பாயிரமும் நன்றாயிருக்கின்றது. அதையும் அப்படி செய்க. வந்தனம்.

* * *
திருமுகம் 7

திருச்சிற்றம்பலம்

அன்பு அறிவு இரக்கம் ஈஸ்வரபக்தி முதலிய நற்குணங்களாற் சிறந்த, எனக்கு நற்றுணையாக விளங்கிய தங்கள் சமுகத்திற்கு வணக்கஞ் செய்து வரையும் விண்ணப்பம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்டு மகிழ விருப்பமுள்ளவனாக இருக்கின்றேன்.

அன்புள்ள ஐயா, தாங்கள் ஆடி மாதம் 16ஆம் தேதி விடுத்த கடிதம் நேற்றைய தினம் வரக்கண்டு அதிலுள்ளவைகளை அறிந்து கொண்டேன். இனி, இதன் அடியில் எழுதும் வரிகளைச் சற்றே தயவுசெய்து பார்க்கத் தொடங்கினால் தங்கள் தோள்களே துணையாகக் கொண்டு பார்ப்பீர்களென்று நம்புகிறேன். சுந்தரமுதலி என்பவரும், கந்தமுதலி என்பவரும் பேரால் பெரியவர்களாகத் தோன்றினாலும் குணத்தால் குன்றிமணியிலும் சிறியவர்களாகக் காண்கிறார்கள்.

இவர் தற்காலத்திற் செய்த மோசம் தங்களுக்குச் சிநிது துன்பஞ் செய்வது. ஆனால் இது பெரிதல்ல. இனி உடனே தங்களுக்கு உண்டு பண்ணிய நஷ்டத்துக்கு ஈடாக, இந்த இருவரும் மோசம்போய் நஷ்டப்பட, அதைக் கண்டு தங்களுக்கு நேரிடும் துன்பமே பெரிதாகக் காணுமென்று உண்மை யாகச் சொல்ல மாட்டுவேன். மோசஞ் செய்தவர் நாசமடைவார்கள் என்கிற உலக வழக்கு வீண் போகாது. இது குறித்துத் தாங்கள் கிலேசப்பட வேண்டுவதில்லை. தங்களுக்கு நடராஜப்பெருமான், ஒரு விதத்திலும் குறைவு வரச் செய்யார். இது சத்தியம். நான் அவ்விடம் வருமளவும், தாங்கள் தற்காலத்திலிருக்கிறபடியே ஓர் அலுவலில் இருக்கவேண்டும். நான் வந்த பின்பு, தங்கள் இஷ்டப்படியே நடத்திக் கொள்ளலாம். என் தேகம், மறையாமலிருக்கு மாகில் எவ்விதத்திலும் தங்கள் கருத்தை நடராஜப் பெருமான் திருவடித்துணையைக் கொண்டு முடித்துவிப்பேன், இதில் சந்தேகம் வேண்டுவதில்லை.

என்னிடத்தில் தங்களுக்கு இருக்கின்ற பிரியம் எவ்வளவு அதில் எண்மடங்கு தங்களிடத்தில் எனக்கு இருக்கின்றதென்று நான் சொல்வதென்ன, கடவுளுக்குத் தெரியும். ஆதலால் என்னிடத்தில் அவநம்பிக்கை வேண்டுவதில்லை. நான் வருவதற்குத் தடையென்னவென்றால், நமது நடராஜப் பெருமானைக் கேட்குந்தோறும் "நல்லது இன்னஞ்சற்றே பொறு, இன்னஞ்சற்றே இரு" என்று உத்தரவாகிறது. இதை அசலார்க்குச் சொன்னால் நம்பார்கள். தங்கள் மட்டில் மாத்திரம் குறிப்பித்தேன். ஆனால் "இன்னஞ் சற்றே யிரு" என்ற படியால் இரண்டொருமாதமாகக் காணுகின்றது. தாங்கள் அவசரப்பட வேண்டாம். இப்போது எவ்வளவு வருத்தப்படுகின்றீர்களோ அதற்குப் பதின்மடங்கு சௌக்கியம் பின்பு கிடைக்கும். இது உண்மை, உண்மை, உண்மை. நான் எவ்வகையாலும், இன்னும் இரண்டு மாதத்தில் வருகிறேன். அது பரியந்தம் பொறுத்திருக்க வேண்டும். சிவானுபவச் சொரூபியாகிய சுவாமி சிதம்பர சுவாமிகள், வெள்ளை வேட்டி திருச்சிற்றம்பல சுவாமிகள், ஓதுவாமூர்த்தி சுந்தரம் பிள்ளை இவர்களுக்கும் என் வந்தனம் குறிப்பிக்க மனமிருந்தால் குறிப்பிக்கலாம். இனி தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். சதா நடராஜப் பெருமானைச் சிந்தித்துக்கொண்டு அலுவலை நடத்த வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

வந்தனம் வந்தனம்.

புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் முற்றுப்பெற்றன.
 

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013